அமித் ஷா
நடப்பாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டையில் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தருகிறார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கி, மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறார். இதன் நிறைவு விழா புதுக்கோட்டையில் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில், பள்ளத்திவயல் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து, பந்தல், மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.
வரும் 4-ம் தேதி திருச்சி விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டைக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து நடத்தப்படும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்தக் கூட்டத்தை பாஜக பொதுக்கூட்டமாக அல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டமாக நடத்த உள்ளதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், விழா முன்னேற்பாடுகளை பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் நேற்று பார்வையிட்டார். முன்னதாக, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.அபிஷேக் குப்தா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருவது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வரவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.