

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பொங்கல் பண்டிகையை சமத்துவம் நிறைந்த திராவிட பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலை வரும், முதல்வருமான ஸ்டாலின்தொண்டர்களுக்கு எழுதிய புத்தாண்டு வாழ்த்து மடல்: இந்த புத்தாண்டு நமது தொண்டர்களுக்கு வெற்றிக்கான புத்தாண்டு. நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் அதை கவனத்தில் கொண்டு பரிசீலித்து நிறைவேற்றுவதற்கான காலம் நிச்சயம் கனியும் தமிழகத்தில் எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து சாய்ந்து கிடக்கிறது. ஆளுங்கட்சியான திமுகதான் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுடன் தொடர்ந்து உறுதியாக போராடி வருகிறது.
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திமுக முன்னிற்கிறது. அதைச் சிதறடிக்க வேண்டுமென எதிரிகளும், உதிரிகளும் வகுக்கும் வியூகங்களை தகர்த்தெறிவோம். தேர்தல் முடியும்வரை நமக்கு ஓய்வில்லை. கட்சியின் வெற்றிக்கு உழைப்புதான் அவசியம். வரும் பொங்கல் திருநாளை கட்சி சார்பில் ‘திராவிடப் பொங்கல்’ விழாவாக முன்னெடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் 3 கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். முதல்கட்டமாக ஒன்றிய அளவிலான போட்டிகள் ஜன.3 முதல் 9-ம் தேதி வரை நடத்த வேண்டும்.
இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் www.dravidapongal.in என்ற தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். இதில் வெற்றிபெறும் அணிகளைக் கொண்டு ஜன.10 முதல் பொங்கல் திருநாள் வரை மாவட்ட அளவிலான போட்டிகளையும் அதில் வெற்றிபெறும் அணிகளைக் கொண்டு பிப்ரவரி மாதத்தில் மாநில அளவிலான போட்டிகளையும் நடத்த வேண்டும்.
இதுதவிர ஊராட்சி அளவில் ஜன. 14, 15-ல் பொங்கல் வைத்து, சிறுசிறு போட்டிகளை நடத்திபரிசளிக்க வேண்டும். தொடர்ந்துஜன.16, 17-ம் தேதிகளில் பொது இடங்களில் கலை, இலக்கிய விழாக்களை நடத்துவதுடன், திரையமைத்து திமுக அரசின் சாதனைகளை விளக்க வேண்டும். திராவிடப் பொங்கல் விழாவை ஊர்தோறும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.