திருச்சி / புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று (ஜன.4) நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்துக்கு 2 நாட்கள் பயணமாக இன்று வரும் அமித் ஷா, திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்தமான் நிக்கோபார் சென்றுள்ள அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புத் துறை விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்பட்டு, மாலை 4.55 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டை பாலன் நகர் கருவேப்பிலான் கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்துக்கு வந்து, அங்கிருந்து பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள `தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அமித்ஷாவுடன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் பங்கேற்கிறார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் திருச்சிக்குப் புறப்பட்டு வரும் அமித் ஷா, இரவு 8 மணியளவில் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுக்கிறார். நாளை காலை 10 மணியளவில் காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஹோட்டல் திரும்பும் அவர் ஓய்வுக்குப் பின்னர், நண்பகல் 12 மணியளவில் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் மோடி பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அமித் ஷா வருகையையொட்டி, அவர் பயணிக்கும் சாலைகள், ஹெலிபேட் , விழா நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ட்ரோன்கள் பறக்கவிட தடை விதித்து மாவட்டஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுக்கோட்டை பொதுக்கூட்டத்துக்கான விரிவான ஏற்பாடுகளை பாஜகவினர் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுக்கூட்டத் திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் நேற்று ஹெலிகாப்டரை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.