திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வருகை தர உள்ளதையொட்டி முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை வருகிறார். திருவண்ணாமலை -செங்கம் சாலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள இறங்கு தளத்தில் ஹெலிகாப்டரில் வரும் அவர், மாலை 4.30 மணிக்கு ரமண மகரிஷி ஆசிரமத்துக்குச் செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்த பின் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாகச்செல்கிறார். அங்கு புதுச்சேரி காவல் துறைக்கு விருதுகளை வழங்கி பேசுகிறார்.
அமித் ஷா வருகையையொட்டி, ஹெலிகாப்டர் தரை இறங்கும் தளத்தில் மத்திய உள்துறை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்தனர். ஹெலிகாப்டரை தரை இறக்கி சோதனை செய்தனர். மேலும் அண்ணாமலையார் கோயிலிலும் ஆய்வு மேற்கொண்டனர். திருவண்ணாமலையில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.