தமிழகம்

அமித் ஷா நாளை புதுச்சேரி வருகை: மத்திய படை ஆய்வு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசு தலைவரின் வண்ண விருதை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை வருகை தருகிறார்.

இதையொட்டி, விமான நிலையத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையின் கமாண்டன்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஆக.8) புதுச்சேரி வருகிறார்.

நாளை மாலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் ஹோட்டல் அக்கார்டு வந்து தங்குகிறார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை, கோரிமேடு மைதானத்தில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருதை வழங்கி உரையாற்றுகிறார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு காலை 10.50 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து திருவண்ணாமலைக்கு செல்கின்றார். மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய ரிசர்வ் காவல் படையின் கமாண்டன்ட் யோகேஷ் புரோகித் தலைமையிலான குழுவினர் புதுச்சேரி விமான நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் புதுச்சேரி சீனியர் எஸ்பிக்கள் கலைவாணன், ராகவ், திவ்யா மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT