கோப்புப் படம்
சென்னை: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈரோடு, சென்னையில் இன்று ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 21-ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இன்னும் 3 நாட்களே அவகாசம் இருப்பதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை, பாஜக தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவிலில் கடந்த 15-ம் தேதி ‘ரோடு ஷோ’ நடத்திய பிரதமர் மோடி, நேற்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய அவர் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை 9 மணி அளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு மாவட்டம் தாமரைப்பாளையம் செல்கிறார். அங்கிருந்து சிவகிரி சென்று, மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒரு மணி நேரம் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
பின்னர், கோவை திரும்பி அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 12 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித் ஷா, மாலை 4.15 மணிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
கோயில் அருகில் இருந்து மாலை 5 மணிக்கு தொடங்கும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பிறகு, கிண்டி விடுதிக்குச் சென்று பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இன்று இரவே டெல்லி திரும்புகிறார்.