தமிழகம்

புதுச்சேரியில் தேசியக்கொடி ஊர்வலம் - அமித் ஷா தொடங்கி வைப்பு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய கொடி ஊர்வலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

தேசியக்கொடி ஊர்வலம் புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் தேசிய கொடியை ஏந்தியும், தேசியத் தலைவர்களின் படங்களைத் தாங்கியும் சென்றனர். இந்த ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தபோது புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக புதுச்சேரி தலைவர் ராமலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாறியக்கொடி: தேசியகொடி ஊர்வலத்தை தொடங்கி வைக்க அமித்ஷா மேடை ஏறியதும், அவரிடம் பாஜக நிர்வாகிகள் காவி நிறத்திலான கொடியைக் கொடுத்தனர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, " தேசிய கொடி தான் வேண்டும்" என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் தேசிய கொடியை எடுத்து வந்து கொடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா தேசிய கொடியை அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

பாஜக கூட்டம்: முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கியிருந்த ஹோட்டலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமித் ஷா பங்கேற்று கட்சியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிகிறது.

இக்கூட்டத்தில் கடந்தமுறையை போன்று பாஜகவுக்கு பேரவைத்தலைவர் பதவியை தருவது தொடர்பாக வலியுறுத்தியதாக மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார். ஏற்கெனவே பேரவைத்தலைவர் பதவியை தரக்கோரி அதிமுக வலியுறுத்தி வரும் நிலையில் பாஜகவும் கோரியுள்ளது.

காரில் புகை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கியிருந்த தனியார் ஹோட்டலின் முன்பு பாதுகாப்பு வாகனமாக வந்த கார் ஒன்றில் புகை ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அந்த வாகனத்தை வேறு ஓர் இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

வழியனுப்பு விழா: புதுச்சேரியில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட புதுச்சேரி விமானம் நிலையத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT