சென்னை / திருச்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக வரும் 4-ம் தேதி தமிழகம் வருகிறார். திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜன. 2-ம் தேதி (இன்று) சென்னை வருகை தருகிறார். காலையில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர், மாலையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் அவருக்கான பாராட்டு விழாவில் பேசுகிறார்.
இதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 4-ம் தேதி புதுக்கோட்டைக்கு வருகிறார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற யாத்திரையின் நிறைவு விழாவில் அவர் உரையாற்றுகிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அன்று இரவு அமித் ஷா திருச்சியில் தங்குகிறார்.
வரும் 5-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அமித் ஷா, தொடர்ந்து மன்னார்புரம் ராணுவத்திடலில் 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் “மோடி பொங்கல்” விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர், திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வரவுள்ளனர். பிரதமர் மோடியும் தமிழகம் வரவுள்ளார். பொங்கலுக்குப் பிறகு கூட்டணி இறுதி வடிவம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜகவை பார்த்து அச்சம்: திருச்சி மன்னார்புரம் ராணுவமைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொங்கல் விழாவுக்கான கால்கோள் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 5-ம் தேதி நடைபெறும் பாஜக உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் அமித் ஷா, தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்து, வழிகாட்டுதல்களை அளிக்க உள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. பழனிசாமியின் சுற்றுப்பயணம் நிறைவுபெற்ற பின்னர், தேஜகூ சார்பில் பெரிய அளவிலான பொதுக்கூட்டம் நடத்தப்படும். திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு பாஜகவை பார்த்து அச்சம் ஏற்பட்டுள்ளது. பிஹார் உள்ளிட்ட மாநிலங்களைப்போல தமிழகத்திலும் தேஜகூ வெல்லும். பின்னர், தமிழகத்தில் திமுக இல்லாத நிலையை ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.