தமிழகம்

4 ஆண்டாக முடங்கி கிடக்கும் அமராவதி சர்க்கரை ஆலை: கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

எம்.நாகராஜன்

மடத்துக்குளம்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இயந்திரக் கோளாறு காரணமாக அரவை பணி முடங்கிக் கிடக்கிறது.

இதனால் கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளும், ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஆலை இயங்காததால், விவசாயிகள் மற்றும் ஆலையில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், டிராக்டர் மற்றும் லாரி உரிமையாளர்கள் என ஆயிரக்கணக்கான சார்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில், ஆலையை புனரமைக்க ரூ.166 கோடி தேவை என அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அடங்கிய ஆய்வுக்குழு நேரில் ஆய்வு செய்து மதிப்பிட்டது. ஆனால், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், கரும்பு விவசாயிகளின் இந்தக் கோரிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் விவசாயப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த அமராவதி சர்க்கரை ஆலையை உடனடியாக புனரமைத்து, மீண்டும் அரவை பணிகளை தொடங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

துருப்பிடிக்கும் இயந்திரங்கள்: தற்போது ஆலையிலுள்ள இயந்திரங்கள் பயன்பாடின்றி முடங்கிக் கிடப்பதால், அவை துருப்பிடித்து மீண்டும் பயன்படுத்தவே முடியாத நிலைக்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் ஆலையைப் புனரமைப்பதற்கான செலவு பல மடங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஒரு கூட்டுறவு அமைப்பு இப்படி வீணாவது, கூட்டுறவு தத்துவத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT