கோவை: ‘தவெகவுடன் கூட்டணி வைப்போம் என்பது வதந்தி. அமைச்சரவையிலும் இடம் கேட்கவில்லை’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (அக்.10) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின் ஜனநாயக ரீதியாக இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் ஆளுங்கட்சி ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்றுள்ளது.
இந்த 2 தொகுதிகளிலும் கடந்த 5 மாதங்களுக்கு முன் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்போது அந்த கட்சி 3-வது இடத்தை பிடித்துள்ளது. இத்தேர்தல் முடிவுகளை தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த அதிமுக தீவிரமாக ஆய்வு செய்து, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மேட்டூர் அணையில் 30 டி.எம்.சி. தண்ணீர் தான் உள்ளது. குருவை சாகுபடி கடந்த ஆண்டு 6.50 லட்சம் ஏக்கரில் நடைபெற்றது. ஆனால், நடப்பாண்டு 1.5 லட்சம் ஏக்கரில் தான் பயிரிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு 12.50 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டு 1.50 லட்சம் ஏக்கர் மட்டும்தான் சம்பா பயிர் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் தண்ணீர் கிடையாது. நெல் சாகுபடி குறைந்துவிட்டதால் தற்போது அரிசி விலை கிலோ ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
காவிரி ஒப்பந்தத்தின் படி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி 123 டி.எம்.சி. தண்ணீர் அக்டோபர் மாதம் வரை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 43 டி.எம்.சி. தண்ணீர்தான் கொடுத்துள்ளனர். பல அழுத்தங்களுக்குப் பிறகு 4 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடுவதாக தெரிவித்துள்ளனர். மேகேதாட்டு அணை பிரச்சினையில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும் மத்திய அசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்களின் சொத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும். பணத்தை திரும்ப பெற்று அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர். மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை என நிறைய நடந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையே காணாமல் போய்விட்டது. பல மாநிலங்கள் தொடர்புடைய விவகாரம் என்பதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
என்.டி.ஏ கூட்டணியில்தான் பா.ம.க. உள்ளது. தவெக-வுடன் நாங்கள் கூட்டணி வைப்போம் என்பது வதந்தி. நாங்கள் தவெக அமைச்சரவையில் இடம் எதுவும் கேட்கவில்லை. இனிமேல் கேட்கபோவதும் இல்லை. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பது குறித்து இப்போதே ஒன்றும் சொல்ல முடியாது. அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று அவர் கூறினார்.