விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு தயார் என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சூசகமாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் விதிமுறைகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், தவெக அதை முழுமையாக கடைப்பிடிக்கும். அதைப்போல் அனைத்துக் கட்சிகளும் அதை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் பொதுக்கூட்டம் என்றால், விஜய்க்கு மட்டும் 51 நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. மற்றவர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்று மக்கள் கேட்கின்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தமிழக வெற்றிக்கழகம் இணைவது தொடர்பாக இதுவரை எந்த கருத்துக்களும் பரிமாறப்படவில்லை. விஜய் தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்பதை, யாராலும் மாற்ற முடியாது. ஆந்திராவின் துணை முதல்வர் பவன்கல்யாண், விஜய்யிடம் பேசியது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் எட்டவில்லை. டெல்லிக்கு சிபிஐ விசாரணைக்கு விஜய் அழைக்கப்பட்டார். அங்கு சென்று அதற்கான பதிலை அளித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்துக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும்.
கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்று மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக் கேட்பது வேறு. கூட்டணி குறித்து முடிவெடுப்பது வேறு. கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் உணர்வுகளை தெரிவிக்கின்றனர். முடிவு செய்ய வேண்டியது விஜய். சமூக ஊடகங்களில் வருகின்ற தகவலுக்கு எல்லாம் பதில் கூற முடியாது. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு இயக்கத்துடன் பின்னிப் பிணைந்து கொண்டு இருக்கின்றன.
எனவே, ஒவ்வொரு ஊடகமும், ஒவ்வொரு கருத்தை கூறிக் கொண்டிருக்கின்றன. விஜய் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு, ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.
அப்படியானால் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் தான் என்டிஏ கூட்டணிக்கு வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று நாங்கள் உறுதியாகக் கூறுவதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.