சென்னை: பிஎல்எம் நிதி நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி புகாரில் தமிழகம், கேரளாவில் 11 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது.
பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவ்சிங் கோ ஆப்ரேடிவ் சொசைட்டி லிமிடெட் (பிஎல்எம்) நிறுவன அதிபர் கேரளாவைச் சேர்ந்த பிரேம்குமார். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 2006-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தமிழகம், கேரளா, புதுச்சேரியில் செயல்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து டெபாசிட்டாகப் பெற்ற பணத்தை பிரேம்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகப் புகார் எழுந்தது.
மேலும், முதலீட்டாளர்களின் பணத்தைத் தனிநபர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்குத் திருப்பிவிட்டதுடன், காஞ்சியில் 300 ஏக்கர் நிலம் வாங்கியது, ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், திரையரங்குகளில் முதலீடு செய்தது, கேபிள் டிவி நிறுவனம் ஒன்றுக்கு ரூ.16 கோடி பரிமாற்றம் செய்தது என சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக கேரள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து அக்.29-ம் தேதி சென்னை விருகம்பாக்கம் வீட்டில் பிரேம்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து, கேரள நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கொச்சி அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதன் ஒருபகுதியாக, நேற்று பிரேம்குமாரின் விருகம்பாக்கம் வீடு, கோயம்பேடு அலுவலகம், புழல் மற்றும் கொளத்தூரில் உள்ள டிராவல்ஸ் அதிபர் பாலாஜியின் அலுவலகம், வீடு, வேப்பேரியில் உள்ள ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவன அலுவலகம், வானகரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 11 இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.