ஜெய் பாலாஜி

 
தமிழகம்

அமைச்சரின் முன்னாள் உதவியாளரின் நிறுவனம் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக புகார்

செய்திப்பிரிவு

மதுரை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி ரியல் எஸ்டேட் நிறுவனம் என்ற பெயரில் பணம் பெற்று மோசடி செய்ததாக ஏராளமானோர் புகார் அளித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். அவர் ரூ.150 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனிடம் உதவியாளராக இருந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு நீக்கப்பட்டவர் மதுரை கலைநகர் பகுதியைச் சேர்ந்த ஜெய் பாலாஜி (42).

          

இவரும், இவரது மனைவி கலாவதியும் வீட்டு மனைகளை ஏமாற்றி வாங்கியது, ரியல் எஸ்டேட் தொழில் என்ற பெயரில் பொதுமக்களிடம் தவணை முறையில் பணம் வசூலித்து மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, ஜெய் பாலாஜியிடம் நெருக்கமாக இருந்த அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பட்டியலை சேகரித்து, அவர்களை அழைத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ‘மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஜெய் பாலாஜி தனது பெயரில் ‘மருதம்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும், தனது உறவினர் பெயரில் ‘மதுரம்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

இந்நிறுவனங்களின் மூலம் வீட்டுமனைகளை விற்பனை செய்வதாகக் கூறி, வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்துள்ளார். பணம் செலுத்தியவர்களுக்கு முறையாக வீட்டு மனைகளை வழங்கவில்லை.

இதில் ஏமாந்தவர்கள் பலர் ஏற்கெனவே பொருளாதாரக் குற்றத்தடுப்பு பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகங்களில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் பலர் தற்போது புகார் அளித்து வருகின்றனர். இவர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள் ளோம். ரூ.150 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணை முடிவில், மேலும் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளது’ என்று கூறினர்.

SCROLL FOR NEXT