சென்னை: நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்ததில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக 2 தலைமை நூலகர்கள் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து பொது நூலகத் துறை பொறுப்பு இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும் போலியான எழுத்தாளர்கள் பெயரில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதேபோல் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றிலும் நூல்கள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தச் சூழலில் பொது நூலகத் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஜெயந்தி அந்த பொறுப்பில் இருந்து கடந்த 8-ம் தேதி விடுவிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பு தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பது குறித்து 9-ம் தேதி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தலைமையிலான குழுவினருடன் அமைச்சர் ராஜ்மோகனை ஆலோசித்தார். அப்போது முறைகேடுகளில் தொடர்புடைய பீனிக்ஸ், சிக்மா, அகல்விளக்கு போன்ற பதிப்பகங்கள் பபாசியில் உறுப்பினராக இல்லை என விளக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன், “மாநிலம் முழுவதும் நூலகங்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி தொடர்பாக தமிழகம் முழுவதும் அனைத்து நூலகங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
லஞ்சஒழிப்பு போலீஸாரும், சர்ச்சைக்குரிய அகல்விளக்கு பதிப்பகத்தாரிடம் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்” என்றார். இந்நிலையில் நூல்கள் கொள்முதல் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் திமுக சார்பிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் தனித்தனியே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா நூலகம் உள்பட தமிழகம் முழுவதும் நூலகங்களில் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் போலி எழுத்தாளர்களின் பெயரில் அச்சிடப்பட்ட அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் 70,674 நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, கோவை பெரியார் அறிவுலகம் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு வழக்கில், நிர்வாகப் பணிகளை மட்டுமே மேற்கொண்ட நூலகர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை எப்ஐஆர் போட முயற்சிப்பதாகவும் எவ்வித வழக்கும் பதிவு செய்யக் கூடாது என்றும் நூலக ஊழியர்கள் நலச் சங்கம் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்தச் சூழலில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் மற்றும் நூலக அலுவலர் எஸ்.காமாட்சி, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் எஸ்.சந்தான கார்த்திகேயன், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக தலைமை நூலகர் மற்றும் நூலக அலுவலர் (பொறுப்பு) தினேஷ்குமார், நூலகர் மற்றும் நூலக அலுவலர் மற்றும் கோவை பெரியார் அறிவுலகம் நூலக பொறுப்பு அலுவலரான வி.சந்தானகிருஷ்ணன், பொது நூலகத் துறை இயக்ககத்தின் தலைமை கணக்கு அலுவலர் ஜெ.ஜூலியட் ஆகியோரை பொது நூலகத் துறை பொறுப்பு இயக்குநர் ஷஜீவனா பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.