சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்ப தாவது: தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி தேசிய சராசரிக்கும் கீழே சென்று, தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. எல்லா துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதெல்லாம் என்னவென்றே தெரியாத நம் முதல்வரோ இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து ‘ஷோ’ காட்டக் கிளம்பிவிட்டார். தவெக அரசின் கீழ் தமிழகம் அதலபாதாளத்துக் குச் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பாழாக்கி விடாதீர்கள்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட செய்தியில், ‘‘தமிழகத்தின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக, தேசிய சராசரியை விட மிகக்குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது.
மறுபுறம், நமக்கு வரவேண்டிய தொழில்முதலீடுகள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்று கொண்டிருக்கின்றன.
தனி நபர் வருவாய் உயர்ந்தால் தானே, ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும். நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்து விடுமா? தமிழ்நாட்டுக்கென ஒரு வளர்ச்சிப் பாதையை கஷ்டப்பட்டு கட்டமைத்து வைத்திருக்கிறோம். அதை பாழாக்கி விடாதீர்கள்’’ என்று கூறியுள்ளார்.
‘வீ த லீடர்ஸ்’ மக்கள் தொடர்பு பொதுச் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘3 தென்கொரிய நிறுவனங்கள் ஆந்திராவில் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த நிறுவனங்கள் ஏற்கெனவே தமிழக அரசுடன் முதலீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் செய்திகள் வந்தன. தற்போது, ஆந்திர அரசு முதலீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இதற்கான காரணம் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.