தமிழகம்

“பழனிசாமி விடும் சாபம் எல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது” - முதல்வர் ஸ்டாலின்

வெற்றி மயிலோன்

சென்னை: “பழனிசாமி அல்ல; அவருக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ் சாமிகளானாலும் அவர்கள் விடும் சாபங்களெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது. ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை, மண்ணில் புதைக்கும் துணிச்சல், ஒருவருக்கும் வராது. இந்தத் திட்டங்கள் இருக்கும் வரை, இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.09) மறைமலைநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை: “தி.மு.க. என்றால், வளர்ச்சி. தி.மு.க.வின் வளர்ச்சித் திட்டங்களைத் தெரிந்து கொள்ள தலைநகர் சென்னையையும், சுற்றியிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளையும் சுற்றி வந்தாலே நன்றாத் தெரிந்துவிடும். ஒரு மினி டூர் போன்று, பல திட்டங்களை பார்க்கலாம். மகேந்திரா, விப்ரோ, பிஎம்டபிள்யூ, சாம்சங் என்று ஏராளமான நிறுவனங்கள் இங்கு இருக்கிறது. லிஸ்ட் போட்டுச் சொன்னால், ஒரு நாள் முழுவதும் கம்பெனிகளின் பெயரை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கலாம்.

          

இந்தத் தொழிற்சாலைகள் அனைத்தும் உருவானது எந்த ஆட்சியில்? நம்முடைய தி.மு.க. ஆட்சியில். பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க. ஆட்சியை உங்கள் ஆதரவோடு அகற்றி, தமிழ்நாட்டுக்கு புதிய விடியலாக திராவிட மாடல் ஆட்சியை அமைத்தோம். 2021-இல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு, இந்தியாவில் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் மாடல், திராவிட மாடல்தான் என்று சொல்லும் அளவுக்கு, மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம்! இந்த வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, அவதூறுகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அவர், இப்போது திடீரென்று என்னுடைய மரணத்தை விரும்பி பேசியிருக்கிறார்.

மாதந்தோறும் உரிமைத்தொகை கொடுத்து, ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு துணை நிற்கும் நான், இல்லாமல் போக வேண்டுமாம். முதல் நாள் - முதல் கையெழுத்துப் போட்டு, மகளிர் அனைவரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்ட இந்தக் கை, மண்ணுக்குள் போக வேண்டுமாம். தமிழ்நாட்டுக் குழந்தைகள் அனைவரும் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று, காலை உணவு – புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் வெற்றியை மனதார கொண்டாடும் நான், கரோனாவில் போயிருக்க வேண்டுமாம். யாருடைய ஆசை? பழனிசாமியின் ஆசை.

ஏழை-எளிய மக்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்று, “மக்களைத் தேடி மருத்துவம்”, “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48”, “நலம் காக்கும் ஸ்டாலின்”, “இதயம் காப்போம் திட்டம்”, “கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை” – இதுமாதிரியான திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஸ்டாலின், இல்லாமல் போக வேண்டுமாம்.

பழனிசாமி அவர்களே... இந்த உலகத்தில் மரணத்தைச் சந்திக்காத எந்த மனிதரும் இல்லை! யாராக இருந்தாலும் மரணம் ஒருநாள் நிச்சயம் வந்தே தீரும். இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும். மண்ணில் புதைப்பார்கள். ஆனால், சவால் விட்டுச் சொல்கிறேன். இந்த ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை, மண்ணில் புதைக்கும் துணிச்சல், ஒருவருக்கும் வராது! அதுதான் உண்மை. இந்தத் திட்டங்கள் இருக்கும் வரை, இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்.

இன்னும் சொல்கிறேன்... 1971-இல் திராவிட முன்னேற்றக் கழக கொங்கு மண்டல மாணவரணி மாநாடு நடந்தது. அப்போது எனக்கு வயது 18. அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். மறைந்த நெஞ்சில் வாழக்கூடிய மொழிப்போர் தளபதி எல்.ஜிதான் மாநாட்டுத் தலைவர். அப்போதுதான் முதன்முதலில் பேசுகிறேன். அவரிடம் அனுமதி வாங்கி, இரண்டு நிமிடம் மாநாட்டில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் என்ன பேசினேன் தெரியுமா? இன்றைக்கும் முரசொலி பத்திரிகை மற்றும் பல்வேறு பத்திரிகைகளில் இருக்கிறது.

“மொழிக்காக – நம்முடைய இனத்திற்காக போராடுகிறோம்! போராடும் இந்த நேரத்தில் நம்முடைய உயிரை இழக்கும் தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம். (என்னுடைய தந்தை கருணாநிதி மேடையில் உட்கார்ந்திருக்கிறார்) என்னுடைய தந்தைக்கு, நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த நான்கு ஆண் பிள்ளைகளில், ஒரு ஆண் பிள்ளை போய்விட்டாலும், என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். காரணம், மொழிக்காக – இனத்துக்காக தனயனை இழந்த தந்தை என்று, என்னுடைய தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்” என்று நான் பேசினேன். அப்படிப் பேசியவன்தான் உங்கள் முன்னால் நிற்கும் ஸ்டாலின். இதெல்லாம் அரசியல் அழுக்காக இருக்கும் பழனிசாமிக்கு தெரியுமா?

பழனிசாமி இவ்வளவும் பேசிவிட்டு, இன்றைக்கு காலையில், என்ன சொல்கிறார் தெரியுமா?. “நான் அவ்வாறு பேசவே இல்லை; கரோனா காலத்தில் ஸ்டாலின் காணாமல் போனார்” என்றுதான் சொன்னேன் என்று பல்டி அடித்து, அடுத்த பொய்யை பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே... ஆட்சியில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும் எப்போதும் களத்தில் நிற்கக்கூடியவன்தான் தி.மு.க.காரன். தி.மு.க. அரசு கரோனா காலத்தையும் எப்படி கையாண்டது என்பது உங்களுக்குத் தெரியும்… அ.தி.மு.க. அரசு கரோனா காலத்தை கொள்ளையடிப்பதற்குரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது.

உண்மையில், கரோனா காலத்தில் ஒரு அரசாங்கத்திற்கு இணையாக, “ஹெல்ப்லைன்” அறிவித்து செயல்பட்டதே தி.மு.க.தான். மக்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள், மருந்து என அத்தியாவசிய தேவைகளையெல்லாம் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற முன்னெடுப்பு மூலமாக தி.மு.க.தான் நிறைவேற்றியது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முதல், கடைக்கோடி தொண்டன் வரை, எங்கள் நெட்வொர்க்தான் கரோனா காலத்தில் டவுன் ஆகாமல் செயல்பட்டது.

அப்போது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கு உதவி செய்யவில்லை என்றால், அ.தி.மு.க. அலுவலகங்களையெல்லாம் மக்கள் முற்றுகையிட்டிருப்பார்கள் என்பதுதான் அன்றைக்கு இருந்த எதார்த்த உண்மை. 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஒன்றிணைவோம் வா உதவி எண்ணை அறிவித்தோம். அறிவித்த 20 நாளிலேயே 15 லட்சம் அழைப்புகள் எங்களுக்கு வந்தது. இப்படி ஒவ்வொரு அழைப்பையும் சரிபார்த்து, சரிபார்த்து, அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் நம்முடைய கழக நிர்வாகிகள் மூலமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உதவிகளை வழங்கிய இயக்கம்தான் இங்கே நிற்கும், திராவிட முன்னேற்றக் கழகம்.

76 லட்சம் உணவு பாக்கெட்டுகளை வழங்கினோம். நேரடியாக 28 லட்சம் பேருக்கு உணவு சமைத்து வழங்கினோம். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட முக கவசங்களை வழங்கினோம். மக்கள் சொன்ன 7 லட்சம் குறைகளை இ-மனுக்களாக மாற்றி, அவற்றை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தோம். ஒரு பேரலல் கவர்மெண்டையே அன்றைக்கு நம்முடைய தி.மு.க. நடத்தியது.

2021-இல் ஆட்சிக்கு வந்தபோது கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை என்ற நிலையை விரைவாக நடவடிக்கை எடுத்து சரி செய்தது தி.மு.க.தான். தேர்தல் ரிசல்ட் வந்து, முதல்வசராக பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்பே, அதிகாரிகளையெல்லாம் அழைத்து ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டேன். பதவியேற்பு விழா முடிந்ததுமே நான் முதன்முதலில் எங்கு சென்றேன் தெரியுமா?

பத்திரிகைகளில் செய்திகளை பாருங்கள்… பழனிசாமி அவர்களே… முதலில் சென்று பாருங்கள்… நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் அமைக்கப்பட்டிந்த கோவிட் பராமரிப்பு மையத்துக்குதான் ஆய்வுக்குச் சென்றேன். ஆக்சிஜன் உற்பத்தியை முடுக்கி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். கரோனாவுக்காக வார் ரூம் என்ற கட்டளை மையம் அமைக்க உத்தரவிட்டேன். எல்லாத் துறை அமைச்சர்களும் மருத்துவத் துறை அமைச்சர்களாக செயல்பட வேண்டும் என்று உத்தரவு போட்டேன். அதன்படி செயல்பட்டார்கள்.

கரோனா மட்டுமல்ல, தமிழ்நாட்டில் சென்னை உட்பட எந்த மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டாலும், பயிர்ச்சேதம் ஏற்பட்டாலும், நிலச்சரிவு நடந்தாலும் நேரில் சென்று உடனுக்குடன் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை முழுவதும் மக்களுடன் களத்திலேயே இருப்பவன்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பழனிசாமி அவர்களே… நீங்கள் எல்லாம் பேசலாமா?. வெள்ளக் காலத்தில் கூட யாரோ ஏற்பாடு செய்த நிவாரண பொருட்கள் மேல், அ.தி.மு.க. ஸ்டிக்கரை ஒட்டியவர்கள்தானே நீங்கள். இதுதான் உங்கள் தகுதியும் தராதரமும்.

கரோனா காலத்தில் மக்கள் பணியில்தான், எங்களின் மாவீரன் மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் அவர்களை இழந்தோம்! அந்த அன்பழகன் அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்னும் ரீங்காரமிட்டிருக்கிறது என்னுடைய மனதில்… “நாங்கள் எல்லாம் வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான் தி.மு.க.வுக்குள்ளேயே நுழைந்திருக்கிறோம்!” என்று அடிக்கடி சொல்வார்… எங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது!” அந்தப் பேச்சு இணையத்தில் அப்போது வைரல் ஆனது. அதுதான் தி.மு.க. காரன்… ஒவ்வொரு உடன்பிறப்புகளும் அந்தளவுக்கு கொள்கை உறுதி கொண்டவர்களாகதான் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உடன்பிறப்புகளுக்கு தலைமைத் தொண்டனாக இருக்கும் நான் போய் கொரோனாவுக்கு பயப்படுவேனா?.

என் இறுதிமூச்சு இருக்கும் வரைக்கும்; என் இதயத்துடிப்பு அடங்கும் வரைக்கும்; பெரியார் – அண்ணா - கருணாநிதி காட்டிய பாதையில், தமிழ்நாட்டுக்காகவும் – தமிழ் மொழிக்காகவும் - தமிழினத்துக்காகவும் உழைத்துக் கொண்டேதான் இருப்பேன். பழனிசாமி அல்ல; அவருக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ் சாமிகளானாலும் அவர்கள் விடும் சாபங்களெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது.

2021-இல் திராவிட மாடல் ஆட்சிக்காக, உங்களின் ஆதரவைக் கேட்டு வந்தேன். அப்போதே, அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாக உங்களிடத்தில் கொடுத்துவிட்டுதான் வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில், திராவிட மாடல் என்பது, 2.0 ஆட்சியில் அடையவிருக்கும் புதிய உயரங்களுக்கான அடித்தளம். எதிர்கால தமிழ்நாட்டைக் கட்டமைக்கப் போகும் செயல்திட்டத்தை ‘சூப்பர் ஸ்டாராக’ களமிறக்கியிருக்கிறோம்! சூப்பர்ஸ்டார் யார்? சின்னக் குழந்தைகள்கூட சொல்கிறார்கள். அதுதான் தேர்தல் அறிக்கை.

பா.ஜ.க. கிளைச்செயலாளராக பல்லைக் காட்டும் பாதம்தாங்கி பழனிசாமியால், இப்படியெல்லாம் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேச முடியுமா? அடிமை ஆட்சியைத் தந்த, அவருக்கு சொல்லிக் கொள்வதற்கு என்று, என்ன சாதனை இருக்கிறது? பழனிசாமியின் லட்சணம் உங்களுக்கு தெரியாதா? இங்கிருந்து 50, 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், கூவத்தூரில்தானே கூத்தடித்தார்கள். அந்த அவமானக் காட்சிகள் எல்லாம் நாடு முழுவதும் ஒளிபரப்பாகி அனைவரும் வெட்கித் தலைகுனிந்து கொண்டிருக்கிறோம்! அப்படி முதல்வரான பழனிசாமியும், அவரது அமைச்சரவை ஆமாம்சாமிகளும், என்னென்ன ஆட்டம் போட்டார்கள் என்று உங்களுக்கே தெரியும். அந்த அவலங்களுக்குள் எல்லாம் நான் அதிகமாக போக விரும்பவில்லை.

கூவத்தூர் ஆட்டத்தையே பொறுக்காத தமிழ்நாடு, இப்போது பா.ஜ.க.வுடன் சேர்ந்து போடும் ஆட்டத்தையா பொறுத்துக் கொள்ளும்? வெயிட் அண்ட் ஸீ பழனிசாமி, ஏப்ரல் 23-தான் உங்களின் கொட்டத்துக்கும் - வாய்க்கொழுப்புக்கும் முடிவு கட்டும் ஜட்ஜ்மெண்ட் டே.

நான் மறுபடியும் அழுத்தமாகச் சொல்கிறேன்... பா.ஜ.க. போடுவது எதுவுமே, ஷார்ட்-டெர்ம் பிளான் கிடையாது; எல்லாமே லாங்-டெர்ம் பிளான்; எல்லாமே டேஞ்சரஸ் பிளான்! அந்தப் பிளான்களை செய்வதற்கான துரோகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதன்மை அடிமைதான், பழனிசாமி. நான் சுட்டிக் காட்டுவதால் புதிதாக ரோஷம் வந்து நீங்கள் எதையும் செய்யப் போவதில்லை. அதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடு சார்பாக, உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன்...

எம்.ஜி.ஆர். தலைமையிலிருந்து, இப்போது காலத்தின் கோலமாக உங்கள் கையில் சிக்கியிருக்கும் கட்சியின் பெயரில் இருந்து, அண்ணாவின் பெயரை எடுத்துவிடுங்கள்! திராவிடத்தையும் எடுத்துவிடுங்கள். அதற்குப் பிறகு, காவி வேட்டி கட்டிக்கொண்டு, பியூஷ் கோயல், ஃபட்னாவிஸ், தர்மேந்திர பிரதான், அமித்ஷா, மோடி என்று யாருக்கு வேண்டுமானாலும் காவடி தூக்குங்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பாசிச பா.ஜ.க.வும் - அடிமை அ.தி.மு.க.வும், வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படப் போவது நிச்சயம்! உறுதி, உறுதி. நான் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்வதெல்லாம், டபுள் எஞ்சின் - டப்பா எஞ்சின் என்று வருவது எதற்காக? உரிமைத்தொகையை நிறுத்துவதற்காக! விடியல் பயணத்தை முடக்குவதற்காக! புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை தடுப்பதற்காக! இடஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து சமூகநீதியைப் படுகுழியில் தள்ளுவதற்காக. இது எதையுமே, நான் கற்பனையாக சொல்லவில்லை! பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இப்படித்தான் செய்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு அளிக்கும் வாக்கு என்பது, தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கு போடப்படும் தடைக்கற்கள்! இதை, மக்கள் உணர வேண்டும்! 0.07 வளர்ச்சி என்ற அவல நிலையில் அ.தி.மு.க. விட்டுச் சென்ற தமிழ்நாட்டை, உங்கள் ஆதரவுடன் மீட்டு, “11.19 விழுக்காடு வளர்ச்சி! இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி! சூப்பர்ஸ்டார் ஸ்டேட்!” என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறோம்! அதனால்தான், ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் வருகிறார்கள்” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT