

படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரியில் இதுவரை இல்லாத உச்ச அளவாக 89.83 சதவீத வாக்குகள் பதிவானது. ஸ்டிராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 1099 வாக்குச்சாவடிகள் இருந்தன. அதில் பதற்றமானவை 209, கிரிட்டிக்கல் 5 இருந்தன. வாக்குப் பதிவு பணிகளில் 5 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
புதுச்சேரி தேர்தலை கிர்கிஸ்தான், மால்டோவா, மங்கோலியா, பூடான் உட்பட ஆறு வெளிநாடுகளில் இருந்து 9 உறுப்பினர்கள் புதுச்சேரி வந்து பார்வையிட்டனர்.
எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 9.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஏற்கெனவே மொத்தம் 12,591 தபால் வாக்குகள் பதிவாகின.
முதல் முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை முதலே அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வந்தனர். நீண்ட வரிசையில் நின்று இளையோர் தொடங்கி முதியோர் வரை வாக்களித்தனர்.
பாகூரில் கூப்பன் விநியோக தகராறு, திருக்கனூரில் பாஜக- காங்கிரஸ் மோதலால் தடியடி போன்ற சிறு சிறு சம்பவங்கள் மட்டும் நிகழ்ந்தன.
காலை 9 மணிக்கு 17.43 சதவீத வாக்குகளும், முற்பகல் 11 மணிக்கு 37.01 சதவீத வாக்குகளும், பகல் 1 மணிக்கு 56.83 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணிக்கு 72.4 சதவீத வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீத வாக்குகளும் பதிவானது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. காத்திருந்தோருக்கு டோக்கன் தந்து வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இறுதி நிலவரப்படி. 89.83 சதவீத வாக்குகள் பதிவானது. இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே உச்சமாகும். நாட்டிலேயே திரிபுராவில்தான் 88 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்து. அதையும் தாண்டி புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன. பின்னர் தேர்தல் ஆணைய வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு, அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.