வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் துள்ளிச் செல்லும் காளை. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நா.தங்கரத்தினம்
மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கண்டு ரசித்து, மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வென்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சொகுசு கார், டிராக்டர், தங்கக் காசு உட்பட மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று காலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அலங்காநல்லூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர்.
இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட 1,000 காளைகள் களமிறக்கப்பட்டன. மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
வாடிவாசலில் இருந்து புயலென பாய்ந்த முரட்டுக்காளை.
சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் லாவகமாக அடக்கினர். சில காளைகள் வீரர்களை நெருங்க விடாமல் பாய்ந்து சென்றன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் நின்று களமாடின. ஒவ்வொரு சுற்றிலும் 100 காளைகள் வரை அவிழ்த்துவிடப்பட்டன. ஒரு சுற்றுக்கு சுமார் 50 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். சுற்று வாரியாக அதிக காளைகளைப் பிடித்த வீரர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5-வது சுற்று தொடங்கியபோது ஜல்லிக்கட்டு மேடைக்கு வந்தார். அவரை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் வரவேற்றனர்.
கேலரியில் அலைகடலென திரண்டிருந்த பார்வையாளர்கள்
முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் வந்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை 40 நிமிடங்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்த முதல்வர், சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும்பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்.
கருப்பாயூரணி கார்த்திக்... அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல, 17 காளைகளைப் பிடித்த பூவந்தி அபிசித்தர் 2-வது இடமும், 11 காளைகளைப் பிடித்த பாசிங்காபுரம் ஸ்ரீதர் 3-வது இடமும் பிடித்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை பிடித்து முதல் பரிசாக கார் பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக்.
சிறந்த காளைகளுக்கான முதலிடத்தைப் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஏவிஎம்.பாபுவின் காளைக்கு டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழரசனின் காளை 2-வது இடமும், மேட்டுப்பட்டி கென்னடியின் காளை 3-வது இடமும் பிடித்தன.
இதுவரை இல்லாத அளவுக்கு, போட்டியில் வென்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சொகுசு கார், டிராக்டர், தங்கக் காசு உட்பட மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
40 பேர் காயம்: காளைகள் முட்டியதில் தீயணைப்பு வீரர் ராஜேந்திரன், நெல்லை போக்குவரத்துக் காவலர் சிவபாலன் உட்பட 3 காவலர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பார்க்க அலங்காநல்லூருக்கு நேற்று அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர். இவர்களுக்காக வாடிவாசல் முன்பாக இருபுறத்திலும் தற்காலிக கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. வெளியூர் பார்வையாளர்கள் அதிக அளவில் வந்ததால், சுழற்சி முறையில் அனுமதி வழங்கப்பட்டது.
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் தனி கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசித்தனர். தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி மேற்பார்வையில், 2 டிஐஜிக்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உட்பட 3 எஸ்.பி.க்கள், 15-க்கும் மேற்பட்ட டிஎஸ்பிகள் தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண அதிகாலையிலேயே வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரை அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பரிசு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதுரை வீரம் விளைந்த மண். இந்த மண்ணின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைக் கண்டு ரசிக்க இங்கு வந்துள்ளேன். பொதுமக்களின் அறிவு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மதுரையில் `கலைஞர் நூற்றாண்டு நூலகம்' கட்டப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்காக `கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல்' அரங்கை அலங்காநல்லூரில் கட்டிக் கொடுத்துள்ளோம். இந்த நிகழ்வில் 2 அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கால்நடைப் பராமரிப்புத் துறையில் உரிய பணி வழங்க வழிவகை செய்யப்படும்.
அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான சிறப்பு உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடியில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.