தமிழகம்

புதுச்சேரி - கேரளத்துக்கு விமான சேவை: துணைநிலை ஆளுநர் தகவல்

அ.முன்னடியான்

புதுச்சேரி: “புதுச்சேரியை மாஹே மற்றும் கேரள பகுதிகளோடு இணைக்கும் விமான சேவையும் பரிசீலனையில் இருக்கிறது. உடான் விமான சேவை திட்டத்தின்கீழ் கண்ணூர், கோழிக்கோடு, மற்றும் கொச்சிக்கு விமான சேவை திட்டமிடப்பட்டு இருக்கிறது” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.

புதுச்சேரி கேரள சமாஜம் சார்பில், ஓணம் குடும்ப சவுஹ்ரித மேளா கடலூர் சாலை புனித அந்தோனியார் மஹாலில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

மேலும் புதுச்சேரி கேரள சமாஜத்தின் ஆண்டு மலரையும் துணைநிலை ஆளுநர் வெளியிட்டார். நிகழ்ச்சியில், மாஹே எம்எல்ஏ அசோக்குமார், கேரள சமாஜ நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசுகையில், “புதுச்சேரி கேரள சமாஜம் மதம், சாதி, அரசியல் கடந்து சிறப்பாக செயல்பட்டு வருவதை நான் பாராட்டுகிறேன். இது போன்ற நிகழ்ச்சிகள் நம்மிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துகிறது. மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றை நம்மிடையே நிலைத்திருக்க செய்கிறது.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின்கீழ் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற முடியும். இந்த புதிய திட்டத்தின் பலன் அனைவரையும் சென்றடையும் விதமாக பதிவு நடைமுறைகளை கேரள சமாஜம் முன்னெடுக்க வேண்டும்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் ஒரு ரயில் முனையம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்காக ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யவும் ரயில்வே அமைச்சகம் சம்மதம் தெரிவித்திருக்கிறது. புதுச்சேரியை மாஹே மற்றும் கேரள பகுதிகளோடு இணைக்கும் விமான சேவையும் பரிசீலனையில் இருக்கிறது. உடான் விமான சேவை திட்டத்தின்கீழ் கண்ணூர், கோழிக்கோடு, மற்றும் கொச்சிக்கு விமான சேவை திட்டமிடப்பட்டு இருக்கிறது.

புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடுபாதை 2500 மீட்டராக அதிகரிக்கப்படும். அதன் மூலமாக பெரிய அளவிலான சர்வதேச விமான சேவை தொடங்கப்படும். இந்த சேவைகள் புதுச்சேரியை கேரளத்துடன் இணைத்து பயனளிக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT