முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

 
தமிழகம்

“ஓபிஎஸ் அண்ணே... இந்த நாடகம்லாம் வேண்டாம்ணே!” - செல்லூர் ராஜு கிண்டல்

செய்திப்பிரிவு

‘‘ஓபிஎஸ் அண்ணே... இந்த நாடகம்லாம் வேண்டாம்ணே. மக்கள் பார்த்து சலித்துப் போய்விட்டார்கள்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

இது தொடர்பாக மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓபிஎஸ் ஊடுசால் ஓட்டுகிறார். கட்சியில் சேருவதற்கு யாரிடம் கேட்க வேண்டும்... ஊடகம் மூலமா கேட்பார்கள்? இவர் ஊடகத்தில் பேசிப் பேசியேதான் இப்படியாகிவிட்டார். தான் கெட்டுப் போவது மட்டுமல்லாது தன்னோடு இருப்பவர்களையும் கெடுக்கிறார். ஓபிஎஸ் அண்ணே... இந்த நாடகம்லாம் வேண்டாம்ணே. மக்கள் பார்த்து சலித்துப் போய்விட்டார்கள். கருணாநிதி போடாத நாடகமா? இன்று முதலமைச்சர் போடாத நாடகமா... ஒத்திகையா?” என்று சொன்னார்.

          

தொடர்ந்து அவர் பேசுகையில், “கருணாநிதியே கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுவார். அப்படியிருந்தும் அந்தக் கட்சி பெரிய வெற்றிபெறவில்லை. நடிகனுக்கு நாடாள தெரியுமா என்று கேட்ட கருணாநிதியை தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தோற்கடித்து கோட்டை பக்கமே வர முடியாமல் செய்தவர் எம்ஜிஆர்” என்றார்.

அதிமுக-வுக்கு சாதகமான தொகுதிகளை கேட்டு பாஜக நெருக்கடி கொடுக்கிறதாமே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அப்படி உங்களுக்கு மோடியும் நயினார் நாகேந்திரனும் தனியாகச் சொல்லியிருப்பார்கள் போல. ஏங்க நீங்க வேற... அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றிபெறப் போகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பு சுனாமி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. எத்தனை பேர் திமுக-வுடன் கூட்டணி அமைத்தாலும் அத்தனை பேரும் அந்த சுனாமியில் அடித்துச் செல்லப்படுவார்கள்’’ என்றார்.

SCROLL FOR NEXT