“காங்கிரஸுடன் திமுகவுக்கு எந்த மோதலும் இல்லை” - கனிமொழி கருத்து

“காங்கிரஸுடன் திமுகவுக்கு எந்த மோதலும் இல்லை” - கனிமொழி கருத்து

Published on

“காங்கிரஸுடன் திமுக-வுக்கு எந்த மோதல் போக்கும் இல்லை, உறவு சுமுகமாகவே இருக்கிறது” என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பி-யுமான கனிமொழி தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் குழுவின் தலைவரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில். குழு உறுப்பினர்களான உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ-க்களான டாக்டர் எழிலன், தமிழரசி ரவிக்குமார், திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் சங்கம், விவசாயிகள், தொழிலாளர்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், அரசு ஊழியர் சங்கங்கள் ஆகியோர் கோரிக்கை மனுக்களை குழுவிடம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது:

திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாகத் தந்து வருகிறார்கள். ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என்கிற நம்பிக்கையோடுதான் மக்கள் மனுக்களைத் தருகிறார்கள்.

நிச்சயமாகப் புதிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, கூட்டணியில் யாரை இணைப்பது என்பதைப் பற்றிய முடிவை முதலமைச்சர் அவர்கள் தான் அறிவிப்பார்கள். எந்தக் கருத்துக்கணிப்பு வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் என்பது திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ராகுல் காந்தியுடனான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது.

காங்கிரஸ் கூட்டணியை நான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்த மோதல் போக்கும் இல்லை. உறவு சுமுகமாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்பி-யான மாணிக்கம் தாகூர் தன்மானமே முக்கியம் என்று பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எல்லோருக்குமே தன்மானம் தான் முக்கியம். சுயமரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது. தன்மானம் முக்கியம் இல்லை என்று யாரும் சொல்லப்போவது இல்லை” என்றார்.

இதனிடையே தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் நல்ல முடிவு கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன். கூட்டணி குழப்பங்களுக்கு, வதந்திகளுக்கு கனிமொழி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது ஒரு இயற்கையான கூட்டணி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

“காங்கிரஸுடன் திமுகவுக்கு எந்த மோதலும் இல்லை” - கனிமொழி கருத்து
“எங்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும்” - திமுகவை எச்சரிக்கும் மாணிக்கம் தாகூர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in