சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேரின் முதல் கட்ட பட்டியலைப் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதில் முன்னாள் அமைச்சர்கள் 21 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால், திமுக, அதிமுக கூட்டணிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதிமுகவில் ஒவ்வொரு நாளும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. கடந்த 23-ம் தேதி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டது. 24-ம் தேதி 297 வாக்குறுதிகள் இடம்பெற்ற தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அதிமுகவின் 23 வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய பட்டியலைக் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி), நத்தம் விஸ்வநாதன் (நத்தம்), பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் (திண்டுக்கல்), தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) தொகுதியில் போட்டியிடுகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி (குமாரபாளையம்), டி.ஜெயக்குமார் (ராயபுரம்), சி.வி.சண்முகம் (மயிலம்), செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆர்.காமராஜ் (நன்னிலம்), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி), ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), கே.டி.ராஜேந்திர பாலாஜி (சிவகாசி), பா.பெஞ்சமின் (மதுரவாயல்), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (கலசபாக்கம்), கே.சி.கருப்பணன் (பவானி), சி.வீரமணி (ஜோலார்பேட்டை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்), அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் (அரியலூர்) தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதில், 21 பேர் முன்னாள் அமைச்சர்கள், 16 பேர் தற்போது எம்எல்ஏ.க்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொகுதிகள் தவிர, எஞ்சிய 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். ஜான் பாண்டியன், பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் விரும்பும் சின்னத்தில் போட்டியிடலாம். திமுக மாதிரி நாங்கள் கண்டிஷன் போட மாட்டோம். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் ஜனநாயக முறைப்படி செயல்படுபவர்கள்.
எங்கள் கூட்டணியில் பிரதான கட்சி அதிமுக. எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாமே வாக்கு வங்கி உள்ள கட்சிகள்.
எல்லோரும் ஒன்றாக சேர்ந்துள்ளோம். அதனால் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் எங்கள் கூட்டணிக்குத்தான் கிடைக்கும். ஏற்கெனவே இந்த கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து இருக்கிறோம். திமுகவை அகற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். அதிமுகவும், கூட்டணிக் கட்சிகளும் கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்து, மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, மக்களுக்காக வாதாடி இருக்கிறது. மக்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான், எதிர்ப்பு வாக்குகள் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களுக்குக் கிடைக்காது.
இன்று கரூர் முழுவதும் கொட்டகை போட்டு வைத்திருக்கிறார்கள். ஆடு, மாடுகளை அடைப்பது போன்று மக்களை அடைக்கும் கட்சி திமுக. பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. 5 ஆண்டு கால ஆட்சியை மக்கள் பார்த்து விட்டார்கள். எனவே, மக்கள் இந்த ஆட்சியை தூக்கியெறியத் தயாராகிவிட்டார்கள். எத்தனை கொட்டகை போட்டாலும், மக்கள் மனதை மாற்ற முடியாது. உண்மையில் அங்கு ஆடு, மாடுகளை போன்று மக்களை திமுகவினர் அடைக்கிறார்கள். இந்த தேர்தலில் மக்கள் திமுக கூட்டணிக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.