4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்​சனா தகவல்

4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்​சனா தகவல்
Updated on
2 min read

சென்னை: ‘‘தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 4 நாட்​கள் மட்​டுமே வேட்பு மனு தாக்​கல் செய்ய முடி​யும்’’ என மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி, வேட்பு மனு தாக்​கல் மார்ச் 30-ம் தேதி தொடங்​கு​கிறது. வேட்பு மனு தாக்​கல் செய்ய கடைசி நாள் ஏப்.6 ஆகும். இதற்​கிடை​யில், மார்ச் 31 (மகாவீர் ஜெயந்​தி), ஏப்.1 (வங்கி விடு​முறை), ஏப்.3 (புனித வெள்​ளி), ஏப்.5 (ஞா​யிற்​றுக்​கிழமை) ஆகிய 4 நாட்​கள் விடு​முறை என்​ப​தால் அந்த 4 நாட்​களில் வேட்பு மனு தாக்​கல் செய்ய முடி​யாது. இதர 4 நாட்​கள் மட்​டுமே வேட்பு மனு தாக்​கல் செய்ய முடி​யும் என்று தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

மேலும், வேட்பு மனுக்​களை காலை 11 முதல் பிற்​பகல் 3 மணி வரை வழங்​கலாம். வேட்பு மனுக்​கள் பரிசீலனை ஏப்​.7-ம் தேதி நடை​பெறுகிறது. வேட்பு மனுக்​களைத் திரும்​பப் பெற ஏப்​.9-ம் தேதி கடைசி நாள்.

இதற்​கிடையே, மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் அலு​வல​கம் தொகுத்து தயாரித்​துள்ள தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் -2026 கையேடு வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்​தக் கையேட்டை தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா வெளி​யிட்​டு பேசி​ய​தாவது:

தமிழக தேர்​தல் சுதந்​திர​மாக​வும், வெளிப்​படை​யாக​வும் நடை​பெற தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் தேர்​தல் ஆணை​யம் எடுத்து வரு​கிறது. குறிப்​பாக நகர்ப்​புறங்​களில் வாக்​குப்​ப​திவு சதவீதம் குறை​வாக உள்​ளது. அதை அதி​கரிக்க ஊடகங்​கள் முக்​கியப் பங்​காற்ற வேண்​டும். சமூக ஊடகங்​களில் போலி செய்​தி​களைத் தடுக்க வேண்​டும். ஊடகங்​கள் ஊடக நெறி தவறாமல் உண்​மை​யான செய்​தி​களை வெளி​யிட வேண்​டும்.

இந்த தேர்​தல் கையேடு, தேர்​தல் தொடர்​பான அனைத்து தரவு​களை​யும், தகவல்​களை​யும் கொண்​டுள்​ளது. தேர்​தல் நடத்தை விதி​கள், தேர்​தல் பணி​கள், கடந்த கால தேர்​தல் குறித்த புள்ளி விவரங்​கள் கொடுக்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் பண்​டைய குட​வோலை முறை தொடங்கி தற்​போது வரையி​லான தேர்​தல் குறித்த அனைத்து வரலாற்று தகவல்​களை​யும் உள்​ளடக்​கிய​தாக இந்த கையேடு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தின் தாக்​கம் அதி​கரித்​துள்ள இந்த சூழலில், சமூக வலை​தளங்​களில் பரப்​பப்​படும் போலி செய்​தி​களைத் தவிர்த்து அதன் உண்​மைத் தன்​மையை உறுதி செய்த பின்​னரே ஊடகங்​கள் வெளி​யிட வேண்​டும். இவ்​வாறு அர்ச்​சனா பட்​நாயக் பேசி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘‘பல்​வேறு வியா​பாரி​கள் சங்​கங்​கள் கையில் கொண்டு செல்​லும் பணத்​தின் அளவு ரூ.50 ஆயிர​மாக இருப்​பதை அதி​கரிக்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​துள்​ளனர். நாங்​களும் தேர்​தல் ஆணை​யத்​தின் கவனத்​துக்கு கொண்டு சென்​றிருக்​கிறோம். கிராமப் பகு​தி​களில் பணம் கொண்டு செல்​லும் போது ஆவணங்​களைக் காண்​பிக்க முடிய​வில்லை என்​பது போன்ற சிரமங்​கள் இருக்​கின்​றன. சட்​டத்​தில் என்ன சொல்​லப்​பட்​டிருக்​கிறதோ, அதன்​படி​தான் பணி​யாற்ற வேண்டி இருக்​கிறது. மருத்​து​வம் போன்ற அவசர தேவை​களுக்​குப் பணத்தைக் கொண்டு செல்​லும் போது உரிய ஆவணத்தை வாட்ஸ் அப்​பில் காட்​டி​னாலும் ஏற்​றுக் கொள்​ளு​மாறு தேர்​தல் நிலை கண்​காணிப்​புக் குழுக்​களுக்கு அறி​வுறுத்தி இருக்​கிறோம்" என்​றார்.

4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்​சனா தகவல்
“வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி” - சவுரவ் கங்குலி புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in