சென்னை: அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். வரும் 22-ம் தேதி நடைபெறும் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழாவில் அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக 108 இடங்களில் வென்ற நிலையில், கடந்த மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பழனிசாமி தரப்பில், பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.
சி.வி.சண்முகம், சி.விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவரிடம் பழனிசாமி தரப்பு சார்பில் கடிதம் அளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் பேரவைத் தலைவரை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்த விஜய பாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக பேரவைத் தலைவரும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால், நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்’’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜூன் 22-ம் தேதி முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா பனையூரில் நடைபெற உள்ளது. அன்று தவெகவில் விஜயபாஸ்கர் இணைவார் என கூறப்படுகிறது.
விஜயபாஸ்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ.க்களின் பலம் 42 ஆகக்குறைந்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந் துள்ளது.