‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி, வாரிசு அரசியலுக்கு 2026 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன் தினமும், நேற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பழனிசாமி, நேற்று கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கவரைப்பேட்டையில் பேசியதாவது:
எம்ஜிஆர் என்ற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வென்று, தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. மக்களுக்காக வாழ்ந்து மறைந்த அதிமுக தலைவர்களுக்கு வாரிசு இல்லை. மக்கள் தான் வாரிசு. மக்களுக்காகத் தான் உழைத்தனர். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் திட்டங்களைக் கொடுத்து, வளர்ந்த மாநிலமாக ஆக்கியவர்கள் அத்தலைவர்கள்.
மற்ற தலைவர்கள், தங்கள் குடும்பத்துக்காக மட்டும்தான் சிந்திப்பார்கள். தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சியிலும், ஆட்சியிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் பொறுப்புக்கு வரமுடியும். ஆனால், அதிமுக ஜனநாயக இயக்கம். சாதாரண தொண்டர் கூட எம்எல்ஏவாகவும், எம்பியாகவும், முதல்வராகவும் முடியும். சாதாரண கிளைச் செயலாளரால் பொதுச்செயலாளர் ஆக முடியும். உழைப்புக்கு ஏற்ற பதவி வீட்டுக்கதவை தானாகவே தட்டும்.
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் உள்ளவர்களுக்குத்தான் உச்சபட்ச பதவிகள். நாடாளுமன்ற இரு அவைக்கும் கனிமொழி தான் தலைவர், டி.ஆர்.பாலுவை எடுத்துவிட்டனர். அப்படிப்பட்ட கட்சி தமிழகத்தில் தொடர வேண்டுமா? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது 2026 தேர்தல். எம்ஜிஆர், தீயசக்தி திமுக என்று குறிப்பிட்டார், அன்று முதல் இன்று வரை எவ்வளவோ அவதாரம் எடுத்து திமுகவை வீழ்த்திய கட்சி அதிமுக.
புதுசு புதுசாக சிலர் வருகிறார்கள், ஏதேதோ பேசுகிறார்கள். அதிமுக தான் எதிரிகளை வீழ்த்தும் பலம் வாய்ந்த கட்சி. 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவந்து, தமிழகம் இன்று இந்தியாவில் முதன்மை மாநிலமாக உயர்வதற்கு அடித்தளமிட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து 56 மாதங்கள் உருண்டோடிவிட்டது. விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளிகளுக்கு நன்மை செய்தார்களா...? இல்லை எல்லா துறைகளிலும் சுரண்டத்தான் செய்கிறார்கள். 8 கோடி மக்களை சுரண்டி ஒரு குடும்பம் செல்வச் செழிப்பில் இருக்கிறது, அதுக்கு முடிவுகட்டும் தேர்தல் இது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எப்போதும் மதவாதம் என்கிறார். எங்களைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் கிடையாது, கூட்டணியில் உள்ள கட்சியை பற்றித் தான் பேசுவார்கள்.
1999, 2001 ஆகிய தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்து, மத்தியில் ஆட்சியிலும் திமுக பங்கேற்றது. முரசொலி மாறனை இலாகா இல்லாத மந்திரியாக வைத்திருந்தது. அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி. அப்போது விசிகவும் பாஜகவோடு போட்டியிட்டது. (கருணாநிதி, முரசொலி மாறன், வாஜ்பாய் இருக்கும் படத்தை காட்டுகிறார்). இப்படிப்பட்ட ஒரு கட்சி அதிமுகவை விமர்சனம் செய்கிறது. பழைய விஷயங்களை நினைத்துப்பார்க்க வேண்டும் பச்சோந்தி போல அவ்வப்போது நிறம் மாறக்கூடாது. அடுத்தாண்டு தேர்தலில் எத்தனை அவதாரம் எடுத்தாலும் திமுகவை வீழ்த்த மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.
கள்ளக்குறிச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஒரு கதை சொன்னார். நான் ஒரு கதை சொல்கிறேன். திமுக என்ற எஞ்சின் இல்லாத காரை, 10 ஆண்டுகளாக கூட்டணி என்கிற லாரி இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இந்த லாரி மக்கர் செய்கிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்கிறது, மேலிடப் பொறுப்பாளர் பேசுவதை வைத்து பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.
சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்போம் என்று திருமா சொல்கிறார். வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று கம்யூனிஸ்ட் சண்முகம் சொல்கிறார். சில அமைச்சர்கள் 95 சதவீதம் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்றும் சில அமைச்சர்கள் 99 சதவீதம் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்றும் சொல்வது பொய் என்று நாம் சொல்லவில்லை, சண்முகம் சொல்கிறார். ஆக கூட்டணியில் புகைச்சல் கிளம்பிவிட்டது. இந்த கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது. திமுக கூட்டணி நிலைக்காது என்பதற்கு இதுவே சான்று. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் திடீரென மயக்கம் அடைந்து சரிந்தார். அவரை, பழனிசாமியின் பாதுகாவலர்கள் பத்திரமாக மீட்டனர்.