ஊட்டி அதிமுக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள்.
படம்: ஆர்.டி.சிவசங்கர்
ஊட்டி: என்டிஏ கூட்டணியில் ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ஊட்டியில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகளில், கூடலூரில் மட்டும் அதிமுக வேட்பாளர் பொன். ஜெயசீலன் வெற்றி பெற்றார். ஊட்டியில் பாஜக வேட்பாளரும், குன்னூரில் அதிமுக வேட்பாளரும் தோல்வியடைந்தனர்.
இந்நிலையில், இம்முறை ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்படுமென தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஊட்டி தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் போட்டியிடுவார் என்ற நம்பிக்கையோடு தேர்தல் பணிகளையும் அதிமுகவினர் தொடங்கினர்.
இந்நிலையில், ஊட்டி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானதால், நீலகிரி மாவட்ட அதிமுக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதனிடையே ஊட்டி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் ஜெ பேரவை தலைவர் கெரடா ராஜூ, கடநாடு குமார், பெள்ளி, தாம்பட்டி சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கோஷங் கள் எழுப்பப்பட்டன. அதே நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற 2 தொகுதிகளான, குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளில் அதிமுக போட்டியிடவுள்ளது.
இதில், கூடலூர் தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏ.,வாக உள்ள பொன்.ஜெயசீலனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம். குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட கட்சியின் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என அதிமுகவினர் தெரிவித்தனர்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்ற ஜி.கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் அரசு கொறடா கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜு முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தனர்.