தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் நேற்று சேலையூர், பெருங்களத்தூர் பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேனில் சூறாவளி பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: ஒவ்வொரு இடத்திலும் மக்கள் அளிக்கும் எழுச்சியான வரவேற்பு, நாம் பெறப்போகும் மகத்தான வெற்றியை பறைச்சாற்றுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழனிசாமியின் பொற்கால ஆட்சியில் தாம்பரம் தொகுதியில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதையெல்லாம் இன்று மக்கள் எண்ணி பார்க்கிறார்கள். வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதும் தொகுதி யில் பல்வேறு இடங்களில் பட்டா பெற்று தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்.
அதேபோல், கால்வாய் உள்ளிட்ட உங்களின் தேவைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்யப்படும். தொகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக எந்த நேரத்திலும் என்னை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம்.
பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து தமிழகத்திலேயே முதன்மை தொகுதியாக தாம்பரத்தை மாற்றுவேன். மேலும், சிறுபான்மை மகளிர் தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள கூடுதல் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
திமுக வேட்பாளர் பிரச்சாரம்:
தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் கிருத்திகா தேவி மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று கிழக்கு தாம்பரம் மற்றும் செம்பாக்கம், சேலையூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, கிருத்திகா தேவி கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தியுள்ளார். மக்களின் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, தாம்பரம் தொகுதிக்கு ஏராளமான நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் தாம்பரம் தொகுதி மக்களின் நலனுக்கான அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படும்.
ஸ்டாலின் மீண்டும் முதல்வரானால் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி பொற்கால ஆட்சியாக மாற்றி காட்டுவார். எனவே உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.