கும்பகோணம்: “அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதையெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள்ளலாம்” என்று மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணம் வந்தார். அவரை கட்சியினர் வரவேற்றனர். பகவத் விநாயகர் கோயிலுக்கு சென்ற அவர் தரிசனம் முடித்தபின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கும்பகோணத்தில் 2028-ம் ஆண்டு நடைபெறும் மகாமகம் சிறப்பாக நடத்தப்படும். கும்பகோணத்தின் முக்கிய பிரச்சினை தொடர்பாக முதல்வரிடம் பேசி உள்ளேன். விரைவில் கும்பகோணம் பகுதியில் நல்லது நடக்கும்.
ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது தொடர்பாக திங்கட்கிழமை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆலோசனை செய்யப்படும். இதேபோல் தேர்தல் அறிக்கையில் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக முதல்வர் அறிவிப்பார்” என்றார்.
மேகேதாட்டு அணை கட்டப்படுவது தொடர்பாக கேட்டதற்கு, “அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதையெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
கரூரில் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக கேட்டதற்கு, “நான் பதவி ஏற்று 3 நாட்கள்தான் ஆகிறது” என பதிலளித்தார்.