தமிழகம்

சென்னையில் உலகளாவிய திறன் மையங்கள், உற்பத்தி திட்டம்: முதல்வர் விஜய் முன்னிலையில் 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழகத்தின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவ முன்னணி நிறுவனங்களுடன் முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘சப்’ நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ‘நார்டெக்ஸ்’ நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை தமிழகத்தில் முதன் முறையாக நிறுவ முன்வந்துள்ளன.

இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகள் உருவாக் கப்படவுள்ளன. இந்த முதலீடுகள், உயர் மதிப்புடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.

மேலும், உயர்கல்வித்துறையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ‘யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா’ (யுடபிள்யுஏ), இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது.

இது தமிழகத்தில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். இந்தப் பல்கலைக்கழகம், க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 77-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னைவேளச்சேரியில் ரூ.125 கோடி முதலீட்டில் இப்பல்கலைக் கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கடந்த ஜூன் மாதம் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தென்கொரியா பயணித்தார். அதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான ‘மோட்டிவ்லிங்க்’, காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். சென்னை நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில், தொழில்துறை சார்ந்த நிகழ்வில், முதல்வர் விஜய் முன்னிலையில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் முதலீடு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த முதலீடுகள், தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர் கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தி துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகத்தை நிலைநிறுத் துவதில் முக்கியப் பங்காற்றும்.

இந்நிகழ்வில், அமைச்சர் எஸ்.கீர்த்தனா, தலைமைச்செயலர் மு.சாய்குமார், தொழில்துறை செயலர் ச.விஜயகுமார், ‘சப்’ நிறுவன உலகளாவிய பொறியியல் தலைவர் ரோஹின் கோவிந்த ராஜன், ‘நார்டெக்ஸ் குளோபல் ஷேர்டு சர்வீசஸ்’ நிறுவன மேலாண் இயக்குநர் சரவணன் மாணிக்கம், ‘யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா’வின் இந்தியாவுக்கான தலைமைச் செயல்பாட்டு அலுவலர் டேவிட்தாஸ், ‘மோட்டிவ்லிங்க்’ நிறுவன தலைமைச் செயல் அலுவலர் கிம் கி ஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT