படம்: எம்.சாம்ராஜ்

 
தமிழகம்

தமிழகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் புதுச்சேரியில் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு மண்டலம் சென்னை தலைமையகம் சார்பில் புதுச்சேரி அரசின் ஒத்துழைப்புடன் அக்னிவீர் அனைத்து பிரிவு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று அதிகாலை தொடங்கியது.

ராணுவ தேர்வு பணியில் 120 ராணுவ அதிகாரிகள், வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் நேற்று முன்தினம் முதலே புதுச்சேரிக்கு வருகை தந்தனர். நேற்று அதிகாலை முதல் விண்ணப்பதாரர்களின் கல்விச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் உட்பட சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடந்தது. தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது.

முதலில் 1.6 கி.மீ. ஓட்டம் நடந்தது. இதில் தகுதி பெறுபவர்களுக்கு 10 புல் அப், 9 அடி பள்ளம் தோண்டுதல், சமநிலை ஓட்டம், உடல் அளவீடு தேர்வு நடந்தது. இவை அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ராணுவ மருத்துவ குழுவால் உடல் நலம், கண்பார்வை சோதனை செய்யப்படும். வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த ராணுவ முகாமில் நாள்தோறும் 1,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று சுமார் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தேர்வில் பங்கேற்போருக்கு வசதியாக புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து இலவச பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தது. புதுச்சேரி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (20). இவர் புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் முகாமில் கலந்து கொண்டார். அவர் 1.6 கி.மீ தகுதி ஓட்டத்தில் பங்கேற்று ஓடியபோது மயங்கி கீழே விழுந்தார்.

அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT