மேட்டூர் நீர்மட்டம் சரிவு

 
தமிழகம்

443 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு!

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 443 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.

மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும்.

அணையில் போதிய அளவு நீர் இருந்ததால், கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அப்போது, அணையின் நீர்மட்டம் 114.91 அடியாகவும், நீர் இருப்பு 85.58 டிஎம்சியாகவும், நீர்வரத்து 6,339 கன அடியாகவும் இருந்தது.

தொடர்ந்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, அணையின்முழு கொள்ளளவான 120 அடியை கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி எட்டியது.

பின்னர், ஜூலை மாதம் 30-ம் தேதி கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, 16 கண் மதகுகள் வழியாக உபரிநீரும் திறக்கப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக, 7 முறை அணை முழு கொள்ளளவை எட்டியது.

தொடர்ந்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால், அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

இதனை தொடர்ந்து, இன்று காலை வரை 443 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100- அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்த நிலையில், இன்று காலை நீர்மட்டம் 99.84 அடியாகவும், நீர் இருப்பு 64.63 டிஎம்சியாகவும், நீர்வரத்து 208 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 8,000 கன அடியும், கால்வாய் பாசனத்துக்கு 400 கன அடியும் திறக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT