

ஜல்லிக்கட்டு
மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளை அரசு நடத்தவும், அனைத்து சமூக பிரதிநிதிகள் அடங்கிய அறிவுரை குழு அமைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும். பின்னர் பாலமேடு, அடுத்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை கிராம ஜல்லிக்கட்டு குழு நடத்தவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இடையீட்டு மனுதாரர் சார்பில், அவனியாபுரத்தில் பல சமூகத்தினர் வாழ்கின்றனர். இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பிரச்சினை எழுந்ததால் நீதிமன்றம் 2 குழுக்களை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டது எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் மேட்ச் அல்ல. பலக்கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டு நடத்தியதால் குளறுபடிகள் ஏற்பட்டு பிரச்சினைகள் உருவானது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறையினர் நடத்துவதே நல்லதாக இருக்கும். ஜல்லிக்கட்டு நிகழ்வை அரசு ஒருங்கிணைத்து நடத்தும் போது, ஜல்லிக்கட்டு நடத்த தனிநபர்கள் குழுவுக்கு அனுமதி கேட்கும் மனுவை எப்படி பரிசீலிப்பது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அறிவுரைக்குழு உள்ளது எனக் கூறப்பட்டது. இடையீட்டு மனுதாரர் தரப்பில், அவனியாபுரத்தில் சாதிப்பிரச்சனைகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய அறிவுரைக்குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், அரசுத் தரப்பில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை விதிகளின் படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்வை அரசின் வருவாய்த்துறை அதிகாரிகளால் கிராம மக்களைக் கொண்ட அறிவுரைக்குழு அமைத்து நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், ஜல்லிக்கட்டு நிகழ்வை கிராமக்குழுக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
எனவே இந்த 3 இடங்களிலும் அரசின் வருவாய்த்துறையினர் அந்தந்த பகுதியில் வாழும் அனைத்து சமுதாயங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அறிவுரைக்குழுவை அமைத்து, அவர்களையும் இணைத்து நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டுகளை நடத்த வேண்டும். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.