புனுகன்தொட்டி கிராமத்தில் பணி நிறைவடையாத நிலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள்.

 
தமிழகம்

ஓசூர் அருகே ஏழைகளுக்கான அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் முடக்கம்

பணி தாமதத்தால் கட்டிடங்கள் பாழாவதாக குற்றச்சாட்டு

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, ஓசூர் அருகே புனுகன்தொட்டி கிராமத்தில் ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் முடங்கியுள்ள நிலையில், கட்டிடங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, கடந்த 2017-ம் ஆண்டு வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களை மறுகுடியமர்த்தும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஓசூர் அருகே புனுகன்தொட்டி கிராமத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் 336 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

இப்பணி 10 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இப்பணி முடங்கியது. மீண்டும் 2021-ல் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. 2022-ல் வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஆனால், தற்போது வரை 50 சதவீதம் வரை மட்டுமே பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், குடியிருப்பு பகுதியில் குடிநீர் கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட வசதிகள் மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதனால், உரிய பராமரிப்பின்றி கட்டிடங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் தொடங்கிய நிலையில் கரோனா காலத்தால் நிதி ஒதுக்கீடு தாமதம் மற்றும் ஒப்பந்ததாரர் மாற்றம் உள்ளிட்ட காரணங்கள் பணி முடங்கியுள்ளது. இதனால், கட்டி முடிக்கப்பட்ட சில கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், காலதாமதத்தால் உரிய பராமரிப்பின்றி கட்டிடத்தின் உறுதித் தன்மை சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை துரிதப்படுத்தினால் ஓராண்டு வரை பணி நிறைவடையும் நிலையுள்ளது.

வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உடனடியாகத் தலையிட்டு, விடுபட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்து பயனாளிகளைத் தேர்வு செய்து வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT