மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியின் 43-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அருகில் கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான், குருநானக் கல்லூரி செயலாளர் மன்ஜித் சிங் நய்யார் உள்ளிட்டோர். | படம்: எம்.முத்துகணேஷ் |
மேடவாக்கம்: மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் 43-வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 867 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
இவர்களில் 39 பேர் முதுநிலைப் பட்டதாரிகள். மேலும், 3 மாணவர்கள் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துச் சாதனை படைத்தனர். விழாவில், கல்லூரி முதல்வர் முனைவர் மு. அம்துல் தவாப் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் செயலரும் தாளாளருமான எம்.ஜி. தாவூத் மியாகான் தலைமை வகித்தார். சென்னை குருநானக் கல்லூரியின் செயலரும் தாளாளருமான மஞ்சித் சிங் நய்யார் வாழ்த்திப் பேசினார்.
கல்லூரியின் செயலரும் தாளாளருமான எம்.ஜி. தாவூத் மியாகான் பேசுகையில், காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் போற்றிய உயரிய மதிப்புகள், இலட்சியங்கள், கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். ஒழுக்கம், நேர்மை, சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
பட்டங்களை விட நற்பண்புகளும் சமூகத்துக்கான பங்களிப்புகளுமே கல்வியின் உண்மையான அடையாளங்கள். பட்டமளிப்பு உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், மாணவர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமே பட்டம். அவர்களின் வெற்றி பெற்றோருக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்க்கிறது.
கல்லூரிப் படிப்புடன் கற்றல் முடிவதில்லை. வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் தொடர்ந்து கற்றுக்கொண்டு, சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நேர்மை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவையே உயர்வுக்கு வழிவகுக்கும்.
தகவல் தொடர்பு, கணினி, சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக்கொண்டு, தொழில்முனைவிலும் ஈடுபட வேண்டும். அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே பெற்று, கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் கல்விச் சேவையாற்றும் கல்லூரியைப் பாராட்டினார்.
கல்வி, ஆராய்ச்சி, சமூகப் பொறுப்புணர்வு ஆகிய துறைகளில் கல்லூரியின் பங்களிப்பையும் குறிப்பிட்டார். மஞ்சித் சிங் நய்யார் பேசுகையில், பட்டதாரிகள் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும்.
பெற்றோரை மதித்து, அவர்களின் முதுமைக் காலத்தில் துணையாக இருக்க வேண்டும். சமூக நலனுக்காகப் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். விழாவில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.