சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்க திமுக முன்மொழிந்ததாகவும், ஆனால் அதனை பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “பெரும்பான்மை அதிமுக எம்எல்ஏக்களான நாங்கள் அரசுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அரசுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். அதிமுகவின் கொறடா என யாரும் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால், அவரின் உத்தரவு செல்லாது.
அதிமுக எம்எல்ஏ.க்கள் 47 பேரிடமும் கையெழுத்து பெற்றேன் எனக் கூறும் இபிஎஸ், எப்போது எங்கே கையெழுத்து போட்டார்கள் என்று கூற முடியுமா? தைரியம் இருந்தால் அதனை வெளியே காட்ட முடியுமா? தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதை மறைப்பதற்காக இவ்வாறு பேசுகிறார். 47 பேர் என்னை ஆதரிக்கிறார்கள் என சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு வழங்கியது போலியான கடிதம்.
புதுச்சேரி ரிசார்ட்டில் என்ன செய்தார் என்பதை இபிஎஸ் சொல்வாரா? புதுச்சேரி கூட்டத்தில் தான் முதல்வராகப் போவதாக தெரிவித்தார். திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறினார் . ஆட்சியமைக்க டெல்லியில் பேசி, அனுமதி பெற்றுவிட்டதாகவும் சொன்னார். நீங்கள் அனைவரும் அமைச்சராகலாம் என ஆசை வார்த்தை கூறினார். சட்டமன்ற உறுப்பினர்களை இபிஎஸ் மிரட்டவும், அச்சுறுத்தவும் பார்க்கிறார்.
தேர்தல் முடிவு அன்று வெற்றிச் சான்றிதழ் வாங்கிய உடன் 2 திமுக முன்னாள் அமைச்சர்கள் என்னுடைய லைனுக்கு வந்து என்னென்னமோ பேசினார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், மறுநாள் காலையில்தான் இபிஎஸ் ஆட்சியமைக்க போகிறோம். திமுக ஆதரவு கொடுக்கும் என சொன்னார். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அந்த 2 முன்னாள் அமைச்சர்கள் யாரென்று கேட்காதீர்கள். நான் சொல்ல மாட்டேன்.
திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. அவர்களுடன் கூட்டணி வைக்க எப்படி தொண்டர்கள் ஒத்துக் கொள்வார்கள். என் மனைவி கூட சோற்றில் விஷம் வைத்துவிடுவார் என நான் கூறினேன். அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது. அதை ஏற்க மனமில்லாமல், 47 இடங்களில் வெற்றி பெற்றதை மிகப் பெரிய வெற்றி என்று கூறுகிறார். இப்படிப்பட்டவரை பொதுச் செயலாளராக வைத்து என்ன செய்ய முடியும்?
ஜெயலலிதாவைப் போல தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என கூறும் தைரியம் அவருக்கு உள்ளதா? வெற்றி, தோல்வியை சரிசமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவருக்கு அந்த மனப் பக்குவம் கிடையாது. இதுவரை எந்த தோல்விக்கும் பொறுப்பேற்கவில்லை. இந்த தோல்வியில் அனைவருக்கும் பொறுப்புள்ளது. அவரை மட்டும் நான் குற்றம்சாட்டவில்லை.
தமிழகத்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது. அது சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை முதல்வர் ஆக்கலாம் என்ற யாரும் நினைத்து பார்க்காத, சிந்திக்காத ஒரு வாய்ப்பு. திருமாவளவனை முதல்வர் ஆக்கலாம் என திமுகவால் முன்மொழியப்பட்டது. அவர் மட்டும் முதல்வர். மற்ற 33 அமைச்சர் பதவிகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என சொன்னார்கள்.
ஆனால், விசிக ஆட்சி என்றுதான் வரும் எனக் கூறி இபிஎஸ் அதை ஏற்க மறுத்தார். நான்தான் முதல்வர் இல்லையென்றால், நாம் எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று சொல்லிவிட்டார்.
எங்களுடைய நோக்கமும் தவெகவின் நோக்கமும் திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான். அதனால்தான் நாங்கள் இன்றைக்கு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். வேறு எந்த நோக்கமும் கிடையாது.
இதனால்தான் எங்களுக்கும் அவருக்கு கருத்து வேறுபாடு வந்தது. திமுகவின் எதிர்ப்பிலே வளர்ந்துள்ளோம். எந்த சூழலிலும் அதிமுக தான் எங்கள் இயக்கம். இன்றுவரை அவர் தான் எங்களது பொதுச்செயலாளர். எங்களை துரோகிகள் என சொல்கிறார், பின்னர் அவர் திமுகவுடன் போகலாம் என சொன்னதுக்கு என்ன அர்த்தம்” என்று அவர் தெரிவித்தார்.