அதிமுக பலமிழந்து விட்டது என பெங்களூரு வா.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதியால் பொதுமக்களை பழனிசாமி ஏமாற்ற முடியாது. இந்த திட்டங்களை எல்லாம் தேர்தல் நேரத்தில் சொல்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துள்ளனர். பழனிசாமி என்ன வாக்குறுதி அளித்தாலும் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். அதிமுகவின் முழு அழிவுக்கும் பாஜக கூட்டணி தான் காரணம். பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்றால் பழனிசாமி சிறையில் இருக்க வேண்டும்.
கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்த பின்னர் சசிகலா உள்ளிட்ட 17 பேரை மட்டும் விசாரணை செய்தனர். ஆனால், பழனிசாமியை விசாரிக்கவில்லை. அதிமுக ஆட்சியில்
பல்வேறு ஊழல்கள் நடைபெற்றன. அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதல்வர் கூறினார். ஆனால், இதுவரைஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை இல்லை.
பழனிசாமி துரோகி என்ற முத்திரையால் பொதுமக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக பலமிழந்து விட்டது. தற்போது களத்தில் திமுக-தவெகவிற்கு இடையே தான் போட்டி. ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு சென்சார் அனுமதி மறுக்கப்பட்டதால், விஜயைப் பார்த்து எவ்வளவு பயம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இத்திரைப்படத்தை வைத்து அரசியல் சூழ்ச்சி நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.