தமிழகம்

பிடிஆர் தொகுதியில் அதிமுகவா, அமமுகவா? - ஆர்வமாக எதிர்பார்க்கும் திமுகவினர்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவா, அமமுகவா? யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு, திமுக கூட்டணியினரிடையே அதிகமாக உள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் மூன்றாவது முறையாக திமுகவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் களம் இறங்குவது உறுதியாகி விட்டது. அதனால், தொகுதி முழுவதும் அமைச்சர், தனது ஆதரவாளர்களை களம் இறக்கி தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார்.

அவர் கடந்த காலங்களைப்போல் இல்லாமல் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளை இந்த முறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பூர்த்திசெய்ய இருப்பதாகக் கூறுகிறார்கள். அதற்கு முன்னோட்டமாகத்தான் அவர், தொகுதி முழுவதும் பிளாஸ்டிக் நாற்காலிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

          

பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டிடுவது அதிமுகவா?, அமமுகவா? என்றும், யார் வேட்பாளராக போட்டியிடப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதில் அதிமுக கூட்டணியைவிட திமுக கூட்டணியினரே மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு இத்தொகுதி திமுகவினரிடையே நிலவும் கோஷ்டிப் பூசலும் முக்கியக் காரணம்.

இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அதிமுகவில் மத்திய தொகுதியில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பேராசிரியர் ஜெயபால், 85-வது வட்டச் செயலாளர் ஜெயக்குமாரின் மனைவி கவுன்சிலர் முத்துமாரி, முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் அடிபடுகின்றன. செல்லூர் கே.ராஜூவின் பரிந்துரை முத்துமாரிக்கே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக போட்டியிட்டால் ஜெயபால் அல்லது பி.எம்.மன்னனை நிறுத்த கட்சித் தலைமை ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பி.எம்.மன்னன், சொந்தப் பணத்தை இறக்க மனமில்லாமல் அதிமுக ஆட்சியை பிடித்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு மாநகராட்சியில் முக்கியப் பதவி கேட்கலாம் என்ற மனநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதனால், ‘சீட்’ பெறுவதற்கு பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், பி.எம்.மன்னன், அமமுகவை சேர்ந்த டேவிட் அண்ணாதுரை போட்டியிட்டால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடும் போட்டியை தரலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. பி.எம்.மன்னன் போட்டியிட்டால் அவருக்கு திமுகவில் கோஷ்டியாக செயல்படுபவர்களின் ஆதரவு மறைமுகமாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதனால், அவர்கள் பி.எம்.மன்னனை போட்டியிட வைக்க பழைய கட்சிப் பாசத்தில் வலியுறுத்தி வருகிறார்கள், என்றனர்.

SCROLL FOR NEXT