இபிஎஸ்
சேலம்: “அதிமுக சின்னத்தில் வென்ற எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, தவெகவில் சேர்த்த முதல்வர் விஜய்தான் களவாணி. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு சென்றவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார் விஜய்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது: “தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பது அதிமுக. காவரி நடுவர் மன்றம் தேவையற்றது என்பதை பல கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.
அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய், அதிமுக - திமுக கூட்டுக் களவாணி என்று விமர்சனம் செய்திருந்தார். இது எவ்வளவு பெரிய வார்த்தை. முதல்வர் விஜய் தான் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்ப பேச வேண்டும்.
அதிமுக சின்னத்தில் வென்ற எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, தவெகவில் சேர்த்த முதல்வர் விஜய்தான் களவாணி. விஜய் முதல்வர் அந்தஸ்துக்கே வரவில்லை. 4-ம் தர பேச்சாளரைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்.
முதல்வர் விஜய் ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. வெறும் பஞ்ச் டயலாக் பேசி வருகிறார். 60 நாள் ஆட்சியில் என்ன செய்துள்ளனர்? கேமராவை தாங்கிப் பிடிக்க 3 கால்கள் தேவை. ஆனால், விஜய்யின் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால். அது இடறினால், ஆட்சி சாய்ந்துவிடும்.
கூட்டணி கட்சிகளை அனுசரிக்கும் வரை இக்கட்சி நீடிக்கும். கூட்டணி தலைவர்கள் தினம்தோறும் ஒவ்வொன்று சொல்லி வருகிறார்கள். வேறு கூட்டணியில் வென்றவர்கள்தான் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளனர்.
திமுக - அதிமுக கூட்டணி என்பது கட்டுக்கதை. எம்ஜிஆர் கட்சியை துவங்கியபோது சொன்ன தீயசக்தி திமுக என்ற நிலைப்பாட்டில்தான் இன்றும் இருக்கிறோம். என்னுடைய தேர்தல் சுற்றுப்பயணம் முழுவதும் திமுகவின் தவறுகளையே பேசினேன்.
அதிமுகவில் இருந்து வெளியேறுபவர்களை பற்றி அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
ஆட்சி அமையவில்லையென்றால் ஆதிக்கம் என பேசுவார்களா? வேறு இடத்துக்கு சென்றால் அமைச்சர் பதவி கிடைக்கும் எனச் சென்றனர். ஆனால் அவர் பெரிய அண்டாவில் அல்வா கிண்டி கொடுத்துவிட்டார்.
காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளது. கொள்கை கூட்டணி என்றனர். இப்போது பதவிக்காக சென்றுவிட்டனர். இதில் கொள்கை எங்கு உள்ளது?
ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளார் முதல்வர் விஜய். அவரது மேக்கப் மேனுக்கும் ஒரு பதவி கொடுத்து விடுவார். அரசாங்கம் கேள்விக்குறியாகி விட்டது” என்று அவர் கூறியுள்ளார்.