சென்னை: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டிருப்பது, மகளிர் அதிகாரம் மற்றும் உரிமைக்கு எதிராக திமுக - காங்கிரஸ் கூட்டணி செய்த துரோகம் என அதிமுக, பாஜக, பாமக, தமாகா கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கண்மூடித்தனமான வெறுப்பு, மாநிலத்துக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தொகுதிப்பங்கீட்டையும் பெண்களுக்கு கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டையும் பாதித்துள்ளது. பிரதமர் மோடி உறுதியளித்த, இருதரப்புக்கும் பலனளிக்கும் திட்டத்தில் பங்கெடுக்க மறுத்து, தமிழகத்துக்கு அநீதி இழைத்துவிட்டார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தின் அரசியல் வலிமையை அதிகரிப்பதற்கும், 20 கூடுதல் நாடாளுமன்ற இடங்களை பெறுவதற்குமான வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், தமிழகம் 9 நாடாளுமன்ற இடங்களை இழந்திருக்கும்.
இந்த மசோதாவுக்கு அவர் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, தொகுதி மறுவரையறை 2026-ம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் அமையும். இதனால் நாம் இன்னும் கூடுதலான நாடாளுமன்ற இடங்களை இழக்க நேரிடும். இதன்மூலம் தமிழகத்துக்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை முதல்வர் செய்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தவிடாமல் அராஜகம் செய்து, மகளிர் முன்னேற்றத்தை தடுத்து ஒட்டுமொத்த இந்திய பெண்களை திமுக - காங்கிரஸ் கூட்டணி வஞ்சித்திருக்கிறது.
இந்த அகங்கார செயல், மிகப்பெரும் வரலாற்றுப் பிழை மட்டுமல்ல, பெண்ணினத்துக்கு செய்த பச்சை துரோகமாகும். நம் பெண்கள் இதை என்றும் மன்னிக்க மாட்டார்கள். பெண்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் விதமாக, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கூடிய விரைவில் நிறைவேற்றி பெண்கள் முன்னேற்றத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி செய்யும்.
பாமக தலைவர் அன்புமணி: மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 59 ஆக உயரும் என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் உறுதியளித்த பிறகும், எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை மு.க.ஸ்டாலின் வீழ்த்தியிருக்கிறார். மகளிருக்கான மசோதாவை வீழ்த்தியது மட்டுமின்றி, அதை பட்டாசு வெடித்தும் கொண்டாடியிருக்கிறார். மு.க.ஸ்டாலினை மகளிர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டால் தென் மாநிலங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இதனை எதிர்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளாதது மிகவும் துரதிருஷ்டவசமானது. தொகுதி மறுவரையறை என்பது கிராமங்களும், நகரம் போல் வருவதற்கானஒரு வாய்ப்பு. அதன் வளர்ச்சியின் பிரதிநிதியாக பெண்கள் இருப்பது நாடு வல்லரசு ஆவதற்கு பொருத்தமானது. மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்: மத்திய அரசால் தமிழகத்துக்கு 59 எம்.பி.க்கள் கிடைக்க இருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் தவறான முடிவால், 6 எம்.பி தொகுதிகள் பறிபோய் 26 எம்.பி தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படும். இது தமிழகத்துக்கும் தமிழக பெண்களுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் தெரிவித்துள்ளனர்.