திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெருக்கடியில் நிற்கும் வாகனங்களிடமும் கட்டணம் வசூலிக்கின்றனர்.
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அரசு நிர்ணய கட்டணத்தை மீறி வாகனங்கள் நிறுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அமைச்சர் தொகுதியிலேயே கட்டணக்கொள்ளை நடப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த சரவணப்பொய்கை, ஜிஎஸ்டி சாலையிலுள்ள 2 இடங்களில் கட்டணம் வசூலிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டது.
வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.10, கார் ஆட்டோ வாகனம் ஒன்றுக்கு ரூ.30, மினி பஸ், வேன் ஒன்றுக்கு ரூ.50, பஸ், லாரி ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
2026 ஜூலை 1 முதல் 2027 ஜூன் 30 வரை கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், அரசு நிர்ணய கட்டணத்தை மீறி 2 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக வாகனங்களில் வரும் பக்தர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தவெக ஆட்சி அமைந்த பின்பு இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் நிகழும் கட்டணக் கொள்ளைகளை முறைப்படுத்த அமைச்சர் ரமேஷ், விலைப்பட்டியலை வெளிப்படையாக அறிவிப்புப் பலகையாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருப்பரங்குன்றத்தில் ஒரு காருக்கு வழங்கப்பட்ட கட்டண ரசீது.
அதன்படி திருப்பரங்குன்றம் கோயிலில் வாகனங்களின் கட்டண வசூலுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனை மூடி மறைத்துள்ள ஒப்பந்ததாரர்கள் இருமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.
தவெக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் ஏலம் எடுத்த திமுகவைச் சேர்ந்த ஏலதாரர்கள் செயல்படுகின்றனர்.
தவெக ஆட்சியில் ஊழல், லஞ்சம், முறைகேடுகள், கட்டணக்கொள்ளைகள் தடு்க்கப்படும் என பேசும் அமைச்சர் நிர்மல்குமாரின் தொகுதியிலேயே கட்டணக் கொள்ளை அரங்கேறுகிறது.
கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான உண்மையான கட்டண விவரம்.
திருப்பரங்குன்றத்துக்குள் நுழைந்தாலே கட்டணம் வசூலிக்கின்றனர். அதனையும் தடுத்து நிறுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கோயில் துணை ஆணையர் செல்வி கூறுகையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்ததாக புகார் வந்ததால் ஒப்பந்ததாரர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். மீண்டும் புகார்கள் வந்தால் ஏலத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.