நடிகை ஜனனி அசோக்குமார்
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் சின்னத்திரை நடிகைக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இந்த விவகாரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நடிகை ஜனனி அசோக்குமார் விளக்கமளித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு பதவி வகித்தார். அப்போது, அத்துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 170 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் சின்னத்திரை நடிகைகள் இருவருக்குத் தொடர்பு இருப்பதாக எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. குறிப்பாக, நடிகை ஜனனி அசோக்குமாரின் பெயர் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டது. இதனால், ஜனனி அசோக்குமார் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் அதிகரித்தது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடிகைகளுக்கும் வழக்கில் தொடர்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே, தனது பெயர் இந்த விவகாரத்துடன் தொடர்பு படுத்தப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்து நடிகை ஜனனி அசோக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிப் பல்வேறு தவறான தகவல்களும் குற்றச்சாட்டுகளும் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரூ.634 கோடி மோசடி தொடர்பான விவகாரத்துடன் எனது பெயர் இணைத்துப் பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டே இருந்து வருகிறேன். எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எனக்குத் தொடர்பு இருந்ததில்லை. அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்புறவும் கிடையாது.
உண்மைகளைச் சரிபார்க்காமல், சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்காமல், ஆதாரங்களை முன்வைக்காமல் இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை எவ்வாறு வெளியிடவும், பரப்பவும் முடிகிறது, இதில் என்ன நியாயம் இருக்கிறது, பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து, யாருடைய ஆதரவுமின்றி எனது வாழ்க்கையையும் தொழிலையும் நானே உருவாக்கியுள்ளேன். இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்கள் எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகின்றன. ஒரு பெண்ணின் மீது உண்மைகளை ஆராயாமல் எளிதில் குற்றம் சுமத்தும் சமூகச்சூழல் வேதனையளிக்கிறது.
எனவே, என்னைப் பற்றிய தவறான தகவல்களை வெளியிடுவதையும் பகிர்வதையும் ஊடகங்களும் பொதுமக்களும் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்துடன் எனது பெயரைத் தவறாகத் தொடர்புபடுத்தும் பதிவுகளை நீக்க வேண்டும். ஒரு குற்றச்சாட்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகாது. உண்மைகளையும் ஆதாரங்களையும் உறுதிப்படுத்திய பின்னரே செய்திகள் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.