சென்னை: பிரபல தமிழ் திரைப்பட நடிகை கவுதமியின் ரூ.25 கோடி நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் அவரிடம் சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நடிகை கவுதமி கடந்த 2023-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில் தனது குடும்ப நண்பரான வேளச்சேரியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர், ஸ்ரீபெரும்புதூரில் தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 46 ஏக்கர் நிலத்தை, அதன் உண்மையான மதிப்பை மறைத்து ரூ.6 கோடிக்கு விற்பனை செய்ய வைத்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், புற்றுநோய் சிகிச்சை மற்றும் தனது மகளின் எதிர்கால செலவுகளுக்காக நிலத்தை விற்க வேண்டிய கட்டாய சூழ்நிலையை அறிந்திருந்தும், அதைப் பயன்படுத்தி நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த அழ
கப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை நீண்ட தேடுதலுக்குப் பிறகு கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
6 இடங்களில் சோதனை
இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 17-ம் தேதி அழகப்பனுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு சொத்து ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை தொடர்பான பதிவுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த ஆவணங்களின் அடிப்படையில் விளக்கம் பெறுவதற்காக நடிகை கவுதமிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அவர் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
அப்போது, ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து பரிவர்த்தனை விவரங்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் வழக்கின் பின்னணி தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கு உதவும் வகையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்கவில்லை
விசாரணை முடிந்து அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து வெளியே வந்த நடிகை கவுதமியிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, ``வழக்கு விசாரணையில் இருப்பதால் தற்போது எதுவும் கூற முடியாது; பின்னர் பேசுகிறேன்'' என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை சேகரித்து வரும் ஆதாரங்களின் அடிப்படையில், மேலும் சிலரிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இந்த வழக்கு தொடர்பாக கவுதமியிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.