டாஸ்மாக் | கோப்புப் படம்
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டை விட 30 சதவீதத்துக்கு மேல் மது விற்பனை அதிகரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 4,800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நகர்ப்புறக் கடைகளில் அதிகளவிலும், கிராமப்புறங்களில் குறைந்த அளவிலும் மது விற்பனை நடைபெறும். இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கட்சி கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் வழக்கத்தை விட கூடுதலாகவே விற்பனை நடைபெறுவது வழக்கம். மேலும் வாக்குகளுக்காக மது விநியோகம் செய்யப்படலாம் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மது விற்பனை, கடைகளில் மதுபானங்களின் இருப்பு ஆகியவற்றை டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் விற்பனை மற்றும் கையிருப்பு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்பிக்கப்படும். விதிகளின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கடைகளில் 30 சதவீதம் கூடுதல் விற்பனை நடந்தால் அது அதிக விற்பனையாகக் கருதப்பட்டு, விசாரணை நடத்தப்படும்.
கடைகளில் இருப்பு: மேலும் கடைகளில் மதுபானங்களின் இருப்பு கடந்த ஆண்டை விட 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. தற்போது அனைத்து கடைகளும் கணினிமயமாக்கப் பட்டுள்ளதால் விற்பனை மற்றும் இருப்பு குறித்து உடனடியாக அறியமுடியும். மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது என அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும் திடீரென விற்பனை அதிகரிக்கும் கடைகளையும் தீவிரமாக கண்காணிக்கிறோம். சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.