சென்னை: “விளைநிலங்களை காக்க போராடிய பி.ஆர்.பாண்டியனை வழக்கில் இருந்து விடுவிக்க ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் நீதிமன்றம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்று கழக நிறுவனத்துக்கு (ஓஎன்ஜிசி) எதிராக போராடியதுக்காக, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
விளைநிலங்களை காக்க விவசாயிகளை ஓரணியில் திரட்டி போராடிய பி.ஆர்.பாண்டியன் மீது உள்நோக்கத்துடன் பொய் வழக்கு தொடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆளும் அரசுகள் இழைக்கும் அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராகப் போராடுவது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அந்த வகையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ள காவிரிப்படுகையை பாதுகாக்க பி.ஆர்.பாண்டியன் முன்னெடுத்த போராட்டம் எப்படி தவறாகும்?
அப்படி போராடியவர் மீது வழக்கு தொடுத்து சிறைப்படுத்துவதும் அரசியலமைப்புக்கு எதிரானது. விளைநிலங்களை காக்கப் போராடிய 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த திமுக அரசிடம் எப்படி கருணையை எதிர்ப்பாக்க முடியும்?.
ஓஎன்ஜிசி குழாய்களைச் சேதப்படுத்தியதாக சொல்லப்படும் குற்றத்துக்கு 13 ஆண்டுகள் சிறை என்றால், முன்னோர்கள் அரும்பாடுபட்டு காத்த விளை நிலங்களை மீளவும் உருவாக்க முடியாத அளவுக்கு மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் என அழித்தொழிப்பவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது?
எனவே, விளைநிலங்களை காக்க போராடிய பி.ஆர்.பாண்டியனை வழக்கில் இருந்து விடுவிக்க ஓஎன்ஜிசி நிறுவனம் மற்றும் நீதிமன்றம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று சீமான் கூறியுள்ளார்.