பி. வில்சன் | கோப்புப் படம்
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.எட். மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான ஜூலை மாத SWAYAM செமஸ்டர் தேர்வுகளை தமிழ்நாட்டிலேயே எழுத நடவடிக்கை எடுக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, திமுக எம்பி வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.எட். மாணவர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாத SWAYAM செமஸ்டர் தேர்வுகளை டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் எழுதவிருக்கிறார்கள்.
ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட – பலரும் தாங்கள் தமிழ்நாட்டிற்குள்ளேயே தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்திருந்த போதிலும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள மைசூர், மங்களூர், பெங்களூர் போன்ற இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) யின் இந்த நடவடிக்கை நியாயமற்றது மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நலனுக்கு தீவிரமாக கேடு விளைவிப்பதாகும்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பி.எட். மாணவர்கள் SWAYAM தேர்வு மூலமே தங்களது பல்கலைக்கழகப் பாடத்திட்ட முடிவுச் சான்றிதழைப் பெற வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், மாணவர்களை பல நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேறு மாநிலங்களுக்கு பயணிக்க வைப்பது – குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்த, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பயணச் செலவு, தங்குமிடச் செலவு ஆகியவற்றை ஏற்க இயலாத அளவுக்கு பெரும் சுமையை மாணவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
தேர்வுக்கு பத்து நாட்களுக்கும் குறைவாக மட்டுமே உள்ள நிலையில், இந்த வகை ஒதுக்கீடுகள் மாணவர்களின் மனஅழுத்தத்தையும், அவர்களின் தயாரிப்பையும் கடுமையாக பாதிக்கின்றன.
தமிழ்நாட்டுக்குள் போதிய அளவு தேர்வு மையங்கள் இருந்தும், மாணவர்களை அண்டை மாநிலங்களுக்கு தள்ளுவது தவிர்க்க முடியாத கஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களின் கல்வி எதிர்காலத்தையே ஆபத்தில் தள்ளுகிறது.
எனவே, தேர்வு தேதி நெருங்கிவரும் சூழலில், பாதிக்கப்பட்ட அனைத்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் உடனடியாக தேர்வு மையங்களை மாற்றி தமிழ்நாட்டிற்குள்ளேயே மறு ஒதுக்கீடு செய்யுமாறும், குறிப்பாக மாணவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு முன்னுரிமை அளித்து – தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்யுமாறு NTA-க்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்" என வில்சன் தெரிவித்துள்ளார்.