சென்னை: சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதால், 40 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பேஸ் 2 மற்றும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி, விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றங்களை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் டெர்மினல் 4 அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. டெர்மினல் 4 அருகே உள்ள வாகனங்கள் உள்ளே வருவதற்கான டோல்கேட் மூடப்பட்டுள்ளது.
பணியில் டிராபிக் மார்ஷல்கள்
தாம்பரம் பகுதியில் இருந்து விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை சர்வீஸ் சாலையை பயன்படுத்தி, டெர்மினல் 2 நுழைவு வாயில் டோல்கேட் வழியாக விமான நிலையத்துக்குள் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டெர்மினல் 4 புறப்பாடு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள், ஒரே ஒரு டோல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு டிராபிக் மார்ஷல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெர்மினல் 1, டெர்மினல் 2 வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவர்கள் வழக்கமான வழிகளை பயன்படுத்தலாம்.
பயணிகள் வசதிக்காக டெர்மினல் 1, டெர்மினல் 2 இடையே இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. ஆனால், டெர்மினல் 1, டெர்மினல் 4 இடையே இயக்கப்படும் பேட்டரி வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுள்ளது.
ஏப்ரல் 24 வரை அமல்
பயணிகள் வசதிக்காக, டெர்மினல் 1, டெர்மினல் 4 இடையிலான வாக்கலேட்டர் வசதிகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் நேற்று (16-ம் தேதி) முதல் வரும் ஏப்.24-ம் தேதி வரை 40 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.