திருப்பராய்த்துறை பகுதியில் நேற்று ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் அருண் பிரசாத்.

 
தமிழகம்

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கரை முதல் பேட்டைவாய்த்தலை வரை விபத்து தடுப்பு நடவடிக்கை

ஆய்வுக்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடும் பகுதிகளில், விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்னெடுத்துள்ளது.

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கரை முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இந்தச் சாலையின் ஒரு பக்கம் காவிரி ஆறும், மறுபக்கம் ரயில் பாதையும் அமைந்துள்ளதால் சாலையை போதிய அளவுக்கு அகலப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுவது குறித்து சாலைப் பயனீட்டாளர் நலக் குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன், சமூக ஆர்வலர் தங்கராசு உள்ளிட்டோர் அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் அருண் பிரசாத்தை சந்தித்து முறையிட்டனர்.

அதன்பின், திட்ட இயக்குநர் அருண் பிரசாத் சமீபத்தில் திண்டுக்கரை முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான 12 கி.மீ. தொலைவுக்கு சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சில பகுதிகளில் சாலை அமைக்காமல் விடுபட்டிருப்பதை கண்டறிந்தார்.

தொடர்ந்து, வருவாய்த் துறை ஆவணங்களின்படி அந்தநல்லூர் முதல் பேட்டை வாய்த்தலை வரை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை முறையாக அளவீடு செய்து, சாலையின் இருபுறமும் எல்லைக் கற்கள் நட்டு, சாலையை அகலப்படுத்தவும், சாலையில் போதிய அகலம் உள்ள இடங்களில் வாகன நிறுத்துமிடம், சிறிய பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், இந்தச் சாலையில் மிகவும் ஆபத்தான பகுதியாகக் கருதப்படும் திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில், பள்ளி மாணவர்கள், பக்தர்கள் நலன் கருதி சிறிய நடை சுரங்கப் பாதை அமைக்கவும், சிறுகமணியில் பொதுமக்கள் சாலையை பாதுகாப்பாக கடக்க வசதியாக நடை மேம்பாலம் அமைக்கவும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் முக்கொம்பு பகுதியில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையுடன் இதர சாலைகள் இணையும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்ந்து, திருப்பராய்த்துறை சுங்கச் சாவடி பகுதியில் இருசக்கர வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல ஏதுவாக, சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்காமல் வாய்க்காலில் சென்று கலக்கும் வகையில் வடிகால் அமைக்குமாறு இந்தச் சாலையை பராமரிக்கும் சுங்க வசூல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கரை முதல் பேட்டைவாய்த்தலை வரையிலான பகுதியில் சாலை விபத்துகள் நேரிடுவது கணிசமாக குறையும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT