ஈரோடு: ஈரோட்டில் கிரேன் உடைந்து 50 அடி உயரத்தில் இருந்து ரயில் என்ஜின் விழுந்து விபத்துக்குள்ளானது. இதற்கு ரயில்வே அதிகாரிகளின் பொறுப்பின்மையே காரணம் என ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரோடு ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் பணிமனை உள்ளது. இங்கு ரயில் என்ஜினில் ஏற்படும் பழுதுகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஒரு மின்சார ரயில் இன்ஜினில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். 80 டன் எடை கொண்ட ரயில் இன்ஜினை கிரேன் மூலம் தூக்கியபோது பாரம் தாங்காமல் கிரேன் உடைந்தது. இதில் 50 அடி உயரத்தில் இருந்து ரயில் இன்ஜின் கீழே விழுந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்துக்கு காரணம் முறையான கால இடைவெளியில் இயந்திரங்கள் மற்றும் கிரேன் போன்றவற்றை பாரமரிக்காததே என ரயில்வே பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.