சென்னை: வேளாண் விளை நிலங்களையும், குடியிருப்புகளையும் அழித்து வேலூர் மகிமண்டலம் பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வேலூர் மாவட்டம் மகிமண்டலம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து வேளாண் விளை நிலங்களைப் பறித்து, தொழிற்சாலைகள் அமைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
வேலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், தாதிரெட்டி பள்ளி, அம்மாவார்பள்ளி, பாலாமத்தூர், மகிமண்டலம் ஆகிய பகுதிகளில் வேளாண்மையை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளிடம் எவ்வித கருத்துக் கேட்பும் நடத்தாமல் தொழிற்பேட்டை (சிப்காட்) அமைத்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளது கொடுங்கோன்மையாகும்.
திமுக அரசின் திட்டப்படி இப்பகுதியில் நாசகார நச்சு ஆலைகளை அமைக்க அனுமதித்தால் சற்றேறக்குறைய 50 கி.மீ. சுற்றளவுக்கு நிலம், நீர் மற்றும் காற்று மாசுபடுவதோடு, பன்னெடுங்காலமாக நிலைத்து வாழ்கிற பூர்வகுடி மக்கள் தங்கள் வாழ்விடத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவலநிலையும் ஏற்படும். மேலும், இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் ரசாயன கழிவுகள் நிறைந்து விசமாகி மக்கள் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறிவிடும்.
இதனால் ஏறத்தாழ பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலம், நீர், காற்று அனைத்தும் நஞ்சாக மாறிவிடும். அதிகாரத் திமிரிலும், பசப்பு வார்த்தைகளிலும் மக்களை ஏமாற்றிச் சொந்த நிலத்திலேயே அதிகாரமற்ற அடிமைகளாக, ஏதிலிகளாக மாற்ற முயலும் திமுக அரசின் திட்டமிட்ட சதிச்செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்குப் பெயர்தான் விடியல் தரும் திராவிட மாடலா?
விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாகி வேளாண் பரப்பளவு குறைந்துகொண்டே போகும் தற்காலச் கொடுஞ்சூழலில், அரச அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் மக்களை அடக்கி - ஒடுக்கி வானூர்தி நிலையம், எட்டுவழிச்சாலை, நிலக்கரி சுரங்கம், தொழிற்பேட்டை அமைப்பது என ஆளும் அரசுகளும் தன் பங்கிற்கு விளைநிலங்களை அழிப்பது இந்த நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்படவே வழிவகுக்கும்.
ஏற்கெனவே அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், விளை நிலங்களைப் பறித்து அரசே நச்சுத் தொழிற்சாலைகள் அமைப்பது மக்களை வாழவே முடியாத வறுமை நிலைக்குத் தள்ளிவிடும்.
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என ‘நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்’ பிரிவு - 10 கூறும் நிலையில் அரசே அதனை மீறுவது எவ்வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, வேளாண் நிலங்களைப் பறிப்பதென்பது வேளாண்மையை மட்டுமின்றி, நிலத்தடிநீர், காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, மக்களின் நலத்தையும் கெடுத்து, சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் நிலங்களை அபகரித்துத் தொழிற்வளாகம் அமைக்க முயல்வது விவசாயிகளுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஆகவே, வேலூர் மாவட்டம் மகிமண்டலம் சுற்றுவட்டாரப் பகுதி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை அபகரிக்கும் கொடுங்கோன்மையை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.