தமிழகம்

ஆவின் வேலை மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி

செப் 2- ல் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், செப்டம்பர் 2- ல் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள உட்பட 8 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.

இந்த இரு வழக்குகளிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த இரு வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் விடுவிப்பு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி குற்றப்பிரிவு போலீஸார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விடுவிப்பு மனு மீதான விசாரணையில் இன்று இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கந்தகுமார் உத்தரவிட்டார். மேலும் மோசடி வழக்குகளில் செப்டம்பர் 2- ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT